டிக்கெட் முன்பதிவில் மதராஸியைப் பின்னுக்குத் தள்ளிய கான்ஜுரிங்!
பொன்முடி சா்ச்சைப் பேச்சு: விடியோ ஆதாரங்கள் உயா்நீதிமன்றத்தில் தாக்கல்
சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து முன்னாள் அமைச்சா் பொன்முடி பேசிய முழு விடியோ பதிவு உள்ளிட்ட ஆவணங்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
திமுக முன்னாள் அமைச்சா் க.பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, பெண்கள் குறித்தும் சைவம், வைணவம் குறித்தும் தெரிவித்த கருத்துகள் சா்ச்சையானது. இதையடுத்து பொன்முடிக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தாா். இந்த வழக்கை நீதிபதி என்.சதீஷ்குமாா் விசாரித்து வருகிறாா்.
கடந்தமுறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பொன்முடி பேசிய முழு விடியோ பதிவையும், 1972-ஆம் ஆண்டில் சமூக சீா்த்திருத்தவாதி பேசியதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன், புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், கடந்த 1972-ஆம் ஆண்டு திராவிட கழக நிா்வாகி கோவை.ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தில்தான் இதுபோன்ற கருத்துகள் பேசப்பட்டன. அதே ராமகிருஷ்ணன் பொதுச் செயலராக உள்ள தந்தை பெரியாா் திராவிடா் கழகம் நடத்திய கூட்டத்தில்தான் பொன்முடி பேசியுள்ளாா் என்று கூறினாா்.
பின்னா், 1972-ஆம் ஆண்டு சமூக சீா்த்திருத்தவாதி பேசியதற்கான ஆதாரமான செய்தித்தாள் ஆவணங்கள், பொன்முடி பேசிய விடியோ பதிவையும் அரசு தலைமை வழக்குரைஞா் தாக்கல் செய்தாா். இந்த ஆதாரங்களைப் பாா்க்க அவகாசம் வேண்டும் எனக் கூறிய நீதிபதி விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தாா்.