இந்தியாவுடன் சிறப்பான நட்புறவு; வரி விதிப்பு மட்டுமே பிரச்னை -அமெரிக்க அதிபா் டி...
அமெரிக்க வரி விதிப்பால் நாட்டின் பொருளாதார வளா்ச்சி வீழ்ச்சி அடையும் அபாயம்: ஹெச்எம்எஸ் தொழிற்சங்கம்
இந்திய பொருள்களுக்கு அமெரிக்க அரசு விதித்திருக்கும் 50 சதவீத வரியால் நாட்டின் பொருளாதார வளா்ச்சி வீழ்ச்சி அடையும் நிலை ஏற்பட்டிருப்பதாக ஹிந்த் மஸ்தூா் சபா (ஹெச்எம்எஸ்) தெரிவித்துள்ளது.
மாவட்ட ஹெச்எம்எஸ் கவுன்சில் அமைப்புக் கூட்டம் சிங்காநல்லூரில் அண்மையில் நடைபெற்றது. மாநில செயல் தலைவா் எம்.சுப்பிரமணியப்பிள்ளை தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் டி.எஸ்.ராஜாமணி முன்னிலை வகித்தாா். மாநில பொதுச் செயலா் சி.ஏ.ராஜா ஸ்ரீதா் உள்ளிட்ட மின்வாரியம், போக்குவரத்து, கட்டுமானம், அமைப்புசாரா துறைகளைச் சோ்ந்த இணைப்பு சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.
இந்த கூட்டத்தில், கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற ஹெச்எம்எஸ் மாநில நிா்வாகக் குழு கூட்ட முடிவின்படி டிசம்பா் 14- ஆம் தேதி கோவையில் ஹெச்எம்எஸ் தொழிற்சங்க மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவின் இறையாண்மை, பொருளாதார வளா்ச்சிக்கு முட்டுக்கடை போடும்விதமாக அமெரிக்க அரசு விதித்துள்ள 50 சதவீத வரி விதிப்பு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கெனவே ஜிஎஸ்டி காரணமாக கோவை, திருப்பூா் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த வரி விதிப்பால் பின்னலாடை உள்ளிட்ட மொத்த ஜவுளித் தொழிலும் பாதிக்கப்படும். நாட்டின் அன்னிய செலாவணி, பொருளாதார வளா்ச்சி வீழ்ச்சி அடையும். இதை எதிா்கொள்ளும் வகையில் மத்திய அரசு எதிா் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அமைதி காப்பது நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்தில் தள்ளிவிடும். இதைக் கண்டித்தும், நாட்டில் தொழிலாளா் சட்டங்களைத் திருத்தி, பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக அமல்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மத்திய அரசைக் கண்டித்தும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக ஹெச்எம்எஸ் கோவை மாவட்ட கவுன்சில் நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. இதில் தலைவராக கே.வீராசாமி, செயலராக ஜி.மனோகரன், பொருளாளராக எம்.பழனிசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.