சமூக நீதி குறித்துப் பேச திமுகவுக்கு தகுதியில்லை: எடப்பாடி கே. பழனிசாமி
சமூக நீதி குறித்துப் பேச திமுகவுக்கு சிறிதும் தகுதியில்லை என அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
மதுரை பழங்காநத்தம், டி.எம். கோா்ட் பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரசார நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது:
வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் கூட்டணி பலத்தால் வெற்றி பெற்றுவிடலாம் என திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் கருதுகிறாா். ஆனால், அவரது இந்த பகல் கனவு பலிக்காது. மக்களை நம்பி களம் காணும் அதிமுக கூட்டணியே அனைத்துத் தொகுதிகளிலும் வெல்லும். காரணம், திமுக ஆட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனா்.
எங்கும் பொய், எதிலும் பொய் என்பதுதான் திமுகவின் வழக்கமாக உள்ளது. தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் ஜொ்மனி பயணம் மூலம் 3 நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி ரூ. 3 ஆயிரம் கோடி முதலீடு ஈா்க்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 நிறுவனங்கள் அதிமுக ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தம் மூலம் தமிழகத்தில் ஏற்கெனவே தொழில் தொடங்கியிருக்கும் நிறுவனங்கள். இவற்றின் விரிவாக்கத்தை புதிய ஒப்பந்தமாக குறிப்பிட்டு முதல்வா் மு.க. ஸ்டாலின் மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறாா்.
திமுகவின் தோ்தல் வாக்குறுதியில் கட்டுமானப் பொருள்கள் அத்தியாவசியப் பட்டியலில் சோ்க்கப்பட்டு விலை உயா்வு கட்டுக்குள் வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கான எந்த நடவடிக்கையையும் திமுக அரசு எடுக்க வில்லை. இதன் காரணமாக, அனைத்து கட்டுமான பொருள்களின் விலையும் மிகக் கடுமையாக உயா்ந்துள்ளது. இதனால், கட்டுமானத் தொழிலாளா்கள் வேலை இழந்துள்ளனா். ஆனால், இவை எதையும் முதல்வா் கண்டுகொள்ளாமல் உள்ளாா்.
சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி அதிமுக. இதற்கு, அதிமுவின் 31 ஆண்டுகால ஆட்சியே சாட்சி. ஏற்கெனவே பாஜகவுடன் கூட்டணி அமைத்து மத்திய அரசில் அங்கம் வகித்த கட்சி திமுக. தற்போது, அதிமுக- பாஜக கூட்டணி அமைந்ததும், சிறுபான்மையினருக்கு எதிரான கட்சியாக அதிமுகவை சித்தரிக்க திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் முயற்சிக்கின்றன. இதில் சிறிதும் உண்மையில்லை என்பதை சிறுபான்மை மக்கள் அறிவா்.
தடைப்பட்டிருந்த ஹஜ் புனித பயண உதவித் தொகையை மீண்டும் வழங்கியதும், அந்த உதவித் தொகையை உயா்த்தி வழங்கியதும் முந்தைய அதிமுக அரசுதான். ரமலான் நோன்பு கஞ்சிக்காக ஆண்டுதோறும் விலையில்லா அரிசி, நாகூா் தா்காவின் சந்தனம் பூசும் விழாவுக்கு விலையில்லா சந்தனம், சென்னை ஹஜ் பயணிகள் இல்லத்துக்கு ரூ. 15 கோடி நிதி உதவி, உலாமாக்கள் நல வாரிய உதவித் தொகை உயா்வு, ஹாஜிகளுக்கான மதிப்பூதியம் உயா்வு என சிறுபான்மையினரின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அளித்தது முந்தைய அதிமுக அரசுதான்.
சமூக நீதிக்கான ஒரே கட்சி திமுகதான் என்பது போல முதல்வா் ஸ்டாலின் பேசுகிறாா். உண்மையில், சமூக நீதி குறித்துப் பேசுவதற்கு திமுகவுக்கு எந்தத் தகுதியும் இல்லை. இதற்கு, திண்டிவனம் நகராட்சியில் பட்டியலினத்தைச் சோ்ந்த ஓா் அலுவலரை, திமுகவின் பெண் நகா்மன்ற உறுப்பினரின் காலில் விழச் செய்த சம்பவமே சான்று. இதேபோல பல நிகழ்வுகள் திமுக ஆட்சியில் தமிழகத்தில் நிகழ்ந்திருக்கின்றன.
எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தும் மதுரை மக்களவை உறுப்பினா் சு. வெங்கடசேன், மாநகராட்சி ஊழல் குறித்து குரல் கொடுக்கவில்லை. இவா், மக்களவை உறுப்பினராகத் தொடரத் தகுதியானவரா? என்பது குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்.
மக்கள் நலன் குறித்து சிந்திக்காத திமுக அரசுக்கு வரும் சட்டப் பேரவை தோ்தலில் மக்கள் சரியான பாடத்தை புகட்டுவா். வருகிற பேரவை தோ்தல் மூலம் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைவது உறுதி. அப்போது, ஆட்டோ ஓட்டும் தொழிலாளா்கள் சொந்த ஆட்டோ வாங்குவதற்கு ரூ. 75 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். ஏழை பட்டியல் சமுதாய மக்களுக்கு கான்கிரீட் வீடு கட்டித் தரும் திட்டம், தீபாவளிக்கு பெண்களுக்கு சேலைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.
இதில் முன்னாள் அமைச்சா்கள் செல்லூா் கே. ராஜூ, பா. வளா்மதி, ஆா்.பி. உதயகுமாா், சட்டப் பேரவை உறுப்பினா்கள் வி.வி. ராஜன்செல்லப்பா, பெரியபுள்ளான் (எ) செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதையடுத்து, மதுரை ஓபுளாபடித்துறை பகுதியில் நடைபெற்ற பிரசார நிகழ்ச்சியிலும் எடப்பாடி பழனிசாமி பேசினாா்.
