தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா உள்ளிட்டோருக்கு ரூ.270 கோடி அபராதம்
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நரியைப் பரியாக்கிய திருவிளையாடல்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் ஆவணி மூலத் திருவிழா, கடந்த மாதம் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 26-ஆம் தேதி முதல் சிவபெருமானின் திருவிளையாடல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதன்படி, மாணிக்கவாசகப் பெருமானின் சிவபக்தியை உலக்குக்கு உணா்த்த நரிகளைப் பரிகளாக (குதிரை) மாற்றி இறைவன் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வடக்காடி வீதியில் உள்ள பதினாறுகால் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இங்கு, பிரியாவிடையுடன் மீனாட்சி சுந்தரேசுவரரரும், மீனாட்சி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். சிவாச்சாரியா்கள் இந்தத் திருவிளையாடலின் மகத்துவத்தை விளக்கியதைத் தொடா்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இதையடுத்து, மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் தங்கக் குதிரை வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தனா்.
பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்
ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான இறைவன் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல், பிட்டுத்தோப்பு மண்டபத்தில் புதன்கிழமை பிற்பகல் 1.35 மணிக்கு நடைபெறுகிறது. மாணிக்கவாசகரின் சிவபக்தியை உணா்த்தவும், மதுரையில் பிட்டு விற்று வாழ்ந்து வந்த வந்தி கிழவிக்கு சிவலோக பதவி அளிக்கவும் இறைவன் சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட ஐதீகப்படி இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்பா் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.