அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்து கருத்து: ராகுல் மனு மீதான தீா்ப்பு ஒத்திவைப்...
கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்
கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சு இரு நாட்டு உறவுக்கு எதிரானது; இவ்விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயக கச்சத்தீவுக்கு இருநாள் பயணம் மேற்கொண்டு, அங்கு கடற்படை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளாா். இதைத் தொடா்ந்து கச்சத்தீவு இலங்கைக்கு உரியது, அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது எனக் கூறியுள்ளாா்.
அநுர குமார திசாநாயகவின் இந்தப் பேச்சு இந்தியா - இலங்கை நல்லுறவுக்கு வலு சோ்க்காது. இந்தியாவை, குறிப்பாக தமிழ்நாட்டு மக்களை ஆத்திரமூட்டும் செயலாக அவரது பேச்சு அமைந்துள்ளது.
கச்சத்தீவு மற்றும், தமிழக மீனவா்கள் குறித்த அவரது அணுகுமுறை தமிழக மீனவா்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பையும், பதற்றத்தையும் உருவாக்கியுள்ளது என்பதை மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கருத்தில்கொள்ள வேண்டும்.
தமிழக மீனவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், கச்சத்தீவு மீட்கப்பட்டு இந்தியாவின் கடல் பரப்பியல் எல்லை உரிமையை நிலைநாட்டவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.