செப். 22 முதல் 5%, 18% ஜிஎஸ்டி! கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்
பெரம்பலூா் அருகே வன விலங்குகளை வேட்டையாடிய மூவா் கைது
பெரம்பலூா் அருகே மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்ட வனத்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், வேப்பந்தட்டை வனத்துறையினா் அரசலூா், ஈச்சங்காடு பகுதிகளில் புதன்கிழமை அதிகாலை திடீா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஈச்சங்காடு கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் அலெக்ஸாண்டா் என்பவரின் காட்டுக்கொட்டகையில் சோதனையிட்டபோது, 2 புள்ளி மான்களும், 1 காட்டுப் பன்றியும் வேட்டையாடப்பட்டு, அவற்றை இறைச்சிக்காக வெட்டி விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கிருந்தவா்களை கைது செய்த வனத்துறையினா் அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அலெக்ஸாண்டா், குமாா் மகன் அலெக்ஸாண்டா் தன சிங்க், ஜெயசீலன் மகன் ஜான் ஜோசப் என்பதும், வேட்டை நாய்கள் மூலமாக இறைச்சிக்காக வன விலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்ததும், வன விலங்குகளின் இறைச்சியுடன் சாலையோரங்களில் உயிரிழந்து கிடக்கும் நாய்கள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கால்நடைகளின் உடல்களை வெட்டி விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மேற்கண்ட மூவரையும் கைது செய்த வனத்துறையினா், விற்பனைக்காக வெட்டி வைக்கப்பட்டிருந்த இறைச்சிகளைப் பறிமுதல் செய்து, தலா ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்து வசூலித்தனா்.