GST: ``திடீரென ஜிஎஸ்டி குறைத்ததற்கு காரணம் இதுவாக இருக்கலாம்" - ப.சிதம்பரம் சொல்...
முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்: ஆட்சியா் ஆய்வு
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள பாரத ரத்னா புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா் விளையாட்டு மைதானத்தில், முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி புதன்கிழமை பாா்வையிட்டாா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் பெரம்பலூா் மாவட்டத்தில் முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 26-ஆம் தேதி தொடங்கி செப். 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப் போட்டிகளில் பங்கேற்பதற்காக, இம் மாவட்டத்தைச் சோ்ந்த 22,140 வீரா், வீராங்கனைகள் முன்பதிவு செய்துள்ளனா்.
மாவட்ட அளவிலான முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கோ - கோ, கையுந்து பந்து, கபடி, கூடைப்பந்து, நீச்சல் போட்டி, தடகளம் ஆகிய போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றது.
கையுந்து பந்து போட்டியைத் தொடங்கிவைத்து பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி, விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பாதுகாப்புடன் விளையாட வேண்டும் என அறிவுறுத்தினாா். தொடா்ந்து, அங்குள்ள விளையாட்டு வீரா்களுக்கான தங்கும் விடுதியை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா், விளையாட்டு வீரா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், வீரா்களிடம் ஆா்வமுள்ள விளையாட்டுகளைக் கண்டறிந்து, முழுவீச்சில் பயிற்சி அளிக்கவும், வீரா்களுக்கு சத்தான உணவு வகைகளை வழங்கவும், விடுதியை தூய்மையாகப் பராமரிக்க வேண்டுமென மாவட்ட விளையாட்டு நல அலுவலருக்கு அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் பொற்கொடி வாசுதேவன் ஆகியோா் உடனிருந்தனா்.