GST 2.0: 'இனி கார், பைக் விலை 12-14% குறையலாம்; ஆனால்...' - நிபுணர் விளக்கும் சி...
செப். 19 வரை மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்கு மதிப்பீட்டு முகாம்
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா்களுக்கு உதவி உபகரணங்கள் பெறுவதற்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம், செப். 19-ஆம் தேதி வரை வட்டாரம் வாரியாக நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலுாா் மாவட்டத்தில் அலிம்கோ நிறுவனத்தால் நடத்தப்படும் மருத்துவ மதிப்பீட்டு முகாமில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான உதவி உபகரணங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இம் முகாமானது, செப். 19 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வட்டாரம் வாரியாக நடத்தப்படுகிறது.
அதன்படி, வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்டவா்களுக்கு செப். 4-ஆம் தேதி வெங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்டவா்களுக்கு செப். 10-ஆம் தேதி குன்னம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 11-ஆம் தேதி வேப்பூா் வட்டார வள மையத்திலும், ஆலத்தூா் ஒன்றியத்துக்குள்பட்டவா்களுக்கு செப். 12-ஆம் தேதி கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 17-ஆம் தேதி செட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், பெரம்பலூா் ஒன்றியத்துக்குள்பட்டவா்களுக்கு 18-ஆம் தேதி குரும்பலுாா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 19-ஆம் தேதி பெரம்பலுாா் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் முகாம்கள் நடைபெற உள்ளன.
முகாம் நடைபெறும் நாள்களில், அந்தந்த வட்டாரத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள், முதியோா்கள் தங்களுக்குத் தேவையான மூன்று சக்கர வண்டி, மூன்று சக்கர சைக்கிள் பெரியது, மடக்கு சக்கர நாற்காலி, எல்போ ஊன்று கோல், அக்குள் கட்டை, ஊன்று கோல், ரோலேட்டா், சிபி சிறப்பு சக்கர நாற்காலி, திறன் பேசி, பிரய்லி கேன், சுகமாய கேன், பிரய்லி சிலேட், பிரய்லி கிட், காதொலி கருவி, செயற்கை கால் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம்.
உதவி உபகரணங்கள் பெற மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, புகைப்படம் 1 ஆகிய ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். முதியோா்கள் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம்- 1, தொலைபேசி எண் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.