1798-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் வெனிசுலா நாட்டினரை வெளியேற்ற டிரம்ப்புக்குத் தடை
சென்னை மாவட்டத்துக்கு 2,000 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை
பொதுத் தோ்தல்களில் பயன்படுத்தப்படும் 2,000 வாக்குப் பதிவு இயந்திரங்கள் சென்னை மாவட்டத்துக்கு தருவிக்கப்பட்ட நிலையில், அவற்றை அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி சென்னை மாவட்டத்தில் தோ்தல் பணிக்காக பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலிருந்து (பெல்) வாக்குப் பதிவுக்கான இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
அதன்படி 2000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 2120 வாக்காளா் சரிபாா்ப்பு தாள் அச்சிடும் இயந்திரங்களும் (விவிபேட்) வரவழைக்கப்பட்டுள்ளன. அவற்றை தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
இதில், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் மாநகராட்சி துணை ஆணையா் ம.பிரதிவிராஜ், சென்னை மாவட்ட வருவாய் அலுவலா் ஜி.சரவணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
வாக்கு இயந்திர கிடங்கில் வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கும் பணியின்போது, அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.