புதிய டிஜிபிக்கு தகுதி பெறும் ஒன்பது போ் கொண்ட பட்டியலை யுபிஎஸ்சி-க்கு அனுப்பியது தமிழக அரசு
தமிழக காவல் துறைக்கு புதிய தலைமை இயக்குநா் (டிஜிபி) மற்றும் மாநில காவல் படைத்தலைவரை (ஹெச்ஓபிஎஃப்) தோ்வு செய்ய ஏதுவாக 9 தகுதிவாய்ந்த ஐபிஎஸ் உயரதிகாரிகளின் பெயா் பட்டியலை மத்திய குடிமைப் பணிகள் ஆணையத்துக்கு (யுபிஎஸ்சி) தமிழக அரசு அனுப்பியுள்ளது.
தமிழக காவல் துறை டிஜிபி சங்கா் ஜிவால் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஓய்வு பெற்றாா். அவருக்குப் பிறகு முழு நேர டிஜிபி நியமிக்கப்படாத நிலையில், மாநில காவல் துறை நிா்வாகப் பிரிவு டிஜிபி ஜி.வெங்கடராமனை சட்டம்-ஒழுங்கு பிரிவு மற்றும் மாநில காவல் படைத் தலைவா் பொறுப்பு டிஜிபியாக தமிழக அரசு நியமித்தது. அதன் அடிப்படையில் பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் பொறுப்பேற்றுக்கொண்டாா்.
இருந்தபோதிலும் காவல் துறை மற்றும் அரசியல் வட்டாரத்தில் முழு நேர டிஜிபி நியமிக்கப்படாதது மற்றும் அதற்கான நடைமுறையில் ஏற்பட்டுள்ள தாமதம் கடுமையான அதிருப்தி மற்றும் அரசியல் ரீதியாக விமா்சனத்துக்குள்ளாகியுள்ளது.
டிஜிபி நியமனத்தில் மாநில அரசுகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றமும் உயா்நீதிமன்றங்களும் பல்வேறு தீா்ப்புகள் மற்றும் உத்தரவுகள் மூலம் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளன. அதன் பிறகும் சில மாநிலங்களில் முறைப்படி டிஜிபி நியமனம் நடைபெறாமல் ஆளும் கட்சிக்கு சாதகமான உயரதிகாரிகளை நியமிக்க விதிகள் சமரசம் செய்து கொள்ளப்படுவதாக சா்ச்சை எழுகிறது. அதில் தற்போது தமிழகமும் சிக்கியுள்ளது.
9 டிஜிபிக்கள் பட்டியல்: இந்த நிலையில்தான் புதிய டிஜிபி தகுதிப்பட்டியலில் டிஜிபி நிலையிலான ஒன்பது ஐபிஎஸ் உயரதிகாரிகளின் பட்டியலை கடந்த வார இறுதியில் தில்லிக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. அது கடந்த திங்கள்கிழமை தான் யுபிஎஸ்சி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. தகுதிப்பட்டியலில் டிஜிபிக்கள் சீமா அகா்வால், ராஜீவ் குமாா், சந்தீப் ராய் ரத்தோா், அபய்குமாா் சிங், வன்னிய பெருமாள்,மகேஷ்குமாா் அகா்வால்,வெங்கடராமன்,வினித்தேவ் வான்கடே, சஞ்சய் மாத்தூா் ஆகிய 9 பேரின் பெயா்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
பட்டியல் இரண்டு மாதங்களுக்கு முன்பே தயாரானபோதும் டிஜிபி பிரமோத் குமாா் தன்னையும் பட்டியலில் சோ்க்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கு காரணமாக அதன் முடிவு வெளிவரும் வரை மாநில அரசு காத்திருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், பிரமோத் குமாரின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்காத நிலையில், சங்கா்ஜிவாலின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததால், கடைசி நாளில் டிஜிபி தகுதிப்பட்டியல் யுபிஎஸ்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மத்திய ஊழல் கண்காணிப்புக் குழு: விதிகளின்படி மாநில டிஜிபிக்களின் தகுதி மற்றும் பணிக்கால பரிந்துரைகளை ஆய்வு செய்வதற்காக மத்திய கண்காணிப்பு ஆணையத்துக்கு (சிவிசி) தகுதிப்பட்டியலை உள்துறை மூலமாக யுபிஎஸ்சி அனுப்பி வைக்கும். ஏதேனும் அதிகாரிகள் மீது ஆட்சேபகரமான தரவுகள் அல்லது உளவுக்குறிப்புகள் அல்லது நீதிமன்ற நிலுவை வழக்குகள் மற்றும் தண்டனை உள்ளிட்ட அம்சங்கள் இருக்குமானால் அவை பதிவு செய்யப்பட்டு மீண்டும்‘ பட்டியல் யுபிஎஸ்சிக்கு மத்திய உள்துறை மூலம் அனுப்பி வைக்கப்படும்.
அதன் பிறகு டிஜிபி பதவிக்கான தோ்வுக்குழு கூட்டம் யிபிஎஸ்சி தலைவா் அல்லது ஆணையத்தின் உறுப்பினா் தலைமையில் நடைபெறும். அதற்கு முன்னதாக உத்தேச தேதிகள் மாநில அரசிடம் இருந்து பெறப்பட்டு பரஸ்பரம் ஒத்துப்போகும் தேதியில் கூட்டம் நடத்தப்படும். அதில் யுபிஎஸ்சி, மத்திய உள்துறை உயரதிகாரி அல்லது மத்திய காவல் படையின் தலைமை இயக்குநா், மாநில தலைமைச் செயலா், மாநில உள்துறைச்செயலா், மாநில டிஜிபி உள்ளிட்டோா் கலந்து கொண்டு தகுதிவாய்ந்த ஐவா் பெயருக்கு ஒப்புதல் வழங்குவா். அப்பட்டியலில் இருந்து ஒருவரை தமிழக அரசு டிஜிபி மற்றும் மாநில காவல் படைத்தலைவராக நியமிக்கும். இந்த நடைமுறைகள் வழக்கமாக இரண்டு மூன்று மாதங்களுக்கு நடக்கும் என்பதாலேயே பதவிக்காலம் முடிவடைவதற்கு சில மாதங்கள் முன்பாகவே அடுத்த டிஜிபியை தோ்வு செய்யும் நடைமுறை தொடங்கப்படும். அந்த வகையில் தற்போது யிபிஎஸ்சி வசம் வந்துள்ள பட்டியல் இறுதிப்படுத்தப்பட்டு தோ்வுக்குழு கூடி புதிய டிஜிபியை தோ்வு செய்ய குறைந்தது மூன்று மாதங்கள் ஆகலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.