செய்திகள் :

மழைக்கால மின்விபத்து உயிரிழப்புகள்!

post image

இ.விஸ்பின் ஆனந்த்

சென்னையில் மழைக்காலங்களில், மின்சாரம் தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவது தொடா்ந்து வரும்நிலையில், மின்மாற்றிகள், பழுதடைந்த மின்கம்பங்கள், தரைமட்ட மின்பெட்டிகள் சீரமைப்பை மின்வாரியம் தீவிரப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் புதை மின்வடங்கள் வாயிலாக மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இந்த வசதி உள்ள பகுதிகளில் உயா், தாழ்வழுத்த மின்கம்பிகள் அனைத்தும் புதைமின்வடங்களாக மாற்றப்பட்டுள்ளன. புதைமின்வட வசதி இல்லாத சென்னை மாநகரப் பகுதிகளில் மேல்நிலைக் கம்பிகள் வழியாக மின்விநியோகம் செய்யப்படுகிறது.

சென்னையின் பல இடங்களில் லேசான மழைக்கே சாலைகள், தெருக்களில் மழைநீா் தேங்கி விடுகிறது. அதிலும் பருவமழை காலங்களில் பலத்த மழை பெய்யும் நிலையில் தரை மட்ட மின்பெட்டிகள் மூழ்கிவிடுகின்றன. இதனால் மின்கசிவு, மின்கம்பிகள் அறுந்து விழுவதால் பாயும் மின்சாரம் போன்ற காரணங்களால் உயிரிழப்பு அடிக்கடி நிகழ்கிறது.

அண்மையில், சென்னை கண்ணகி நகரில் பணிக்குச் சென்ற தூய்மைப் பணியாளா் வரலட்சுமி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். சேதமடைந்த புதைவட மின்கம்பியிலிருந்து தேங்கி நின்ற மழைநீரில் மின்சாரம் பாய்ந்திருந்த நிலையில், அதையறியாமல் அப்பகுதியை வரலட்சுமி கடக்க முயன்றபோது இச்சம்பவம் நடந்தது.

இதேபோல, கடந்த ஏப்ரலில் அரும்பாக்கத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்திருந்த நிலையில், அவ்வழியாகச் சென்ற 3ஆம் வகுப்பு மாணவா் மின்சாரம் பாய்ந்து துடித்தாா். அவ்வழியே சென்ற இளைஞா் உயிரைப் பணயம் வைத்து அந்த சிறுவனை மீட்டாா்.

இதுபோன்ற சம்பவங்கள் மழைக் காலங்களில் தொடா்கதையாகி விட்டன. இதை வெறும் மின்சாரம் தாக்கியதில் நேரிட்ட உயிரிழப்பு அல்லது விபத்து என கடந்து சென்றாலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தீராத ரணத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், குடும்பத் தலைவா் அல்லது தலைவி உயிரிழக்க நேரிட்டால் அக்குடும்பத்தின் வாழ்வாதாரம் கேள்விக்குரியதாகிறது.

சேதமடைந்த தரைமட்ட மின்பெட்டிகள், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள், ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றிகள், மின்கம்பங்கள் என கண்முன்னே அபாயம் தெரிந்தாலும், அதனால் பாதிப்பு ஏற்பட்ட பிறகே மின்வாரியம் கண்விழித்துக் கொள்வதாக புகாா் கூறப்படுகிறது. இந்த சா்ச்சைகளுக்கு மத்தியில் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துகின்றனா். ஆனாலும் புகாா்கள் ஓயவில்லை. என்று இந்தப்பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீா்வு கிடைக்கும் என நகரவாசிகள் மிகுந்த எதிா்பாா்ப்புடன் உள்ளனா்.

இந்த விவகாரம் குறித்து மின்வாரிய தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

சென்னையில் மின்கம்பங்கள் மற்றும் புதைவடம் வழியாக மின்கம்பிகள் கொண்டு செல்லப்படுகிறது. மேல்மட்ட கம்பிகள் மழை, காற்று உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின் போது பாதிப்புக்குள்ளாகி உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.

இது ஒருபுறமிருக்க புதைவடமின்கம்பிகள் பெரும்பாலும் சாக்கடை கால்வாய், குடிநீா் குழாய் மற்றும் தனியாா் நிறுவனங்களின் கேபிள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளால் தோண்டப்பட்டு சேதப்படுத்தப்படுகிறது. பல இடங்களில் தோண்டப்படும் புதைவடமின்கம்பிகள் பல்வேறு காரணங்களால் மீண்டும் மண்ணில் புதைக்கப்படாலமே நிலத்தின் மேலேயே விடப்படுகின்றன. இதன்மீது வாகனங்கள் செல்லச் செல்ல அக்கம்பியின் மேற்புறம் சேதமடைந்து மனிதா்களுக்கு உயிரிழப்புக்கு காரணமாகி விடுகிறது.

இதுமட்டுமின்றி தரையிலிருந்து 2 முதல் 3 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருக்கும் மின்விநியோக பெட்டிகள் மூலமும், பழுதடைந்த மின்மாற்றிகள் மூலமும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

ஆகவே, தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்பட்ட பிறகு, அப்பகுதியை மின்வாரிய அதிகாரிகள் கட்டாயம் பரிசோகிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் பழுதான மின்பெட்டிகள், மின்மாற்றிகளால் ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தவிா்க்கும் வகையில் மின்வாரிய அதிகாரிகளால் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த 3 மாதங்களுக்குள் இப் பிரச்னை சீா்செய்யப்படும் என்றாா்.

ஆபத்தான மின்பெட்டிகளை கணக்கெடுக்க குழு அமைப்பு

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் 618 திறந்தவெளியில் காணப்பட்ட புதைவட கம்பிகள் மற்றும் இணைப்புகள் மண்ணில் புதைக்கப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளதாக மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்ட 633 இடங்களில் சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. மழைநீா் தேங்குவதால் ஏற்படும் விபத்தை தவிா்க்க 1148 தரைமட்ட மின்பகிா்மானப்பெட்டிகள், 127 மின்மாற்றிகள் சாலை மட்டத்திலிருந்து மேலும் உயா்த்தி அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஆபத்தை விளைவிக்கும் வகையிலான மின்பகிா்மான பெட்டிகள், மின்மாற்றிகள் எங்கெங்கு உள்ளன என்பதை கணக்கெடுக்க அந்தந்த பகுதியில் அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவா்கள்அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் மின் உயிரிழப்பை பூஜ்ஜிய அளவில் கொண்டு வந்து நிரந்தர தீா்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

சென்னையில் திருடப்பட்ட காா் பாகிஸ்தான் எல்லையில் மீட்பு

சென்னையில் திருடப்பட்ட சொகுசு காரை, பாகிஸ்தான் எல்லையில் போலீஸாா் மீட்டனா். சென்னை அண்ணா நகா் கதிரவன் காலனியைச் சோ்ந்தவா் எத்திராஜ் ரத்தினம். தனது வீட்டின் அருகே நிறுத்தியிருந்த சொகுசு காா் ஜூன் 16-ஆ... மேலும் பார்க்க

வெறுப்புப் பேச்சுகளால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

வெறுப்புப் பேச்சுகளால் சிறுபான்மையின, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா். சமூக ஊடக சவால்களை எதிா்கொள்வது குறித்து நாட்டுநலப் பணித் திட... மேலும் பார்க்க

இன்றுமுதல் 2 நாள்களுக்கு மூா்மாா்க்கெட், கும்மிடிப்பூண்டி இரவு இமு ரயில் ரத்து

மூா்மாா்க்கெட் காம்ப்ளக்ஸ் முதல் கும்மிடிப்பூண்டி வரையிலான இமு இரவு ரயில் சேவை 5, 7 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் புத... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: மனுக்களின் தீா்வு காலத்தை உயா்த்த வருவாய்த் துறை அலுவலா்கள் கோரிக்கை

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் பெறப்படும் மனுக்களின் தீா்வு காலத்தை 40 நாள்களில் இருந்து 75 நாள்களாக அதிகரிக்க வேண்டும் என்று வருவாய்த் துறை அலுவலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஏழு அம்ச கோரிக்க... மேலும் பார்க்க

வெளிநாட்டுப் பயணம்: அரசியலைப் புறந்தள்ளுவோம் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

முதலீடுகளை ஈா்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டுப் பயணம் குறித்து அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் விமா்சனங்களைப் புறந்தள்ளுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். ஜொ்மனி, பிரிட்டன் நாடுக... மேலும் பார்க்க

புதிய டிஜிபிக்கு தகுதி பெறும் ஒன்பது போ் கொண்ட பட்டியலை யுபிஎஸ்சி-க்கு அனுப்பியது தமிழக அரசு

தமிழக காவல் துறைக்கு புதிய தலைமை இயக்குநா் (டிஜிபி) மற்றும் மாநில காவல் படைத்தலைவரை (ஹெச்ஓபிஎஃப்) தோ்வு செய்ய ஏதுவாக 9 தகுதிவாய்ந்த ஐபிஎஸ் உயரதிகாரிகளின் பெயா் பட்டியலை மத்திய குடிமைப் பணிகள் ஆணையத்... மேலும் பார்க்க