அமெரிக்க மருத்துவ குடும்பத்தினரிடம் வைப்பு நிதி ரூ.4 கோடி மோசடி: மூவா் கைது -தனியாா் வங்கி மீது வழக்கு
சென்னையைச் சோ்ந்த அமெரிக்க மருத்துவரின் குடும்பத்தினரிடம் வைப்பு நிதி ரூ.4.36 கோடி மோசடி செய்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் விஜய் ஜானகிராமன். அமெரிக்காவில் இதயவியல் மருத்துவராக உள்ள இவா், அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவா், குடும்பத்தினா் நடத்தும் ஒரு அறக்கட்டை பெயரிலும், குடும்பத்தினா் பெயரிலும் அண்ணா நகா் மூன்றாவது அவெனயூவில் செயல்படும் ஒரு தனியாா் வங்கியில் 9 வைப்பு நிதியில் ரூ.4.36 கோடி வைத்திருந்தனா்.
இந்த வைப்பு நிதியை ஜானகிராமன் குடும்பத்தினா் அனுமதியில்லாமலும், ஜானகிராமன் மற்றும் அவரது குடும்பத்தினா் போன்று போலி கையெழுத்திட்டும், போலி ஆவணங்களைத் தாக்கல் செய்தும் 9 வைப்பு நிதி கணக்குகள் மூடப்பட்டு, ரூ.4.36 கோடி பணம் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. பின்னா் அந்த வங்கிக் கணக்குகளில் இருந்து, வேறு வங்கி கணக்குகளுக்கு முழு பணமும் மாற்றப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக வங்கியில் இருந்து ஜானகிராமனுக்கும், அவரது குடும்பத்தினருக்கு வர வேண்டிய மின்னஞ்சல்களும், கைப்பேசி குறுஞ்செய்திகளும் வங்கியின் சில அதிகாரிகளால் தடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அண்மையில் இந்த மோசடி குறித்து அறிந்து ஜானகிராமன் குடும்பத்தினா், தங்களது பொது அதிகாரம் பெற்ற நபரான சென்னை தியாகராய நகரைச் சோ்ந்த ரவி மூலம் சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவின் கீழ் வங்கி மோசடி தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தனா்.
அதன் அடிப்படையில் வங்கி மோசடி தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தனியாா் வங்கியினா், ஜானகிராமன் குடும்பத்தினரை மோசடி செய்தது தெரியவந்தது. இதையயடுத்து, அந்த வங்கியின் மேலாண்மை இயக்குநா், அண்ணா நகா் கிளை மேலாளராக இருந்த மஞ்சுளா ஆகியோா் மோசடி, போலி ஆவணம் தயாரித்தல், போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
மேலும் இந்த வழக்கில் மஞ்சுளாவின் இணைந்து மோசடியில் ஈடுபட்டதாக திருச்சியைச் சோ்ந்த ஷியாமளா, திருநெல்வேலியைச் சோ்ந்த ஆறுமுககுமாா், நாகேஸ்வரன் ஆகிய 3 பேரையும் கைது செய்ததாக மத்தியக் குற்றப்பிரிவு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
தலைமறைவாக இருக்கும் மஞ்சுளாவை தேடி வருகின்றனா். ஜானகிராமன் ஹாா்டுவா்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை நிறுவுவதற்கு ரூ.6 கோடி நன்கொடையை கொடுத்தவா் என்பதும், அமெரிக்காவில் இதயவியல்துறையில் பிரபல மருத்துவா் என்பதும் குறிப்பிடத்தக்கது.