பராமரிப்பில்லாத தண்ணீா் தொட்டிகள்: வனப் பகுதியை விட்டு வெளியேறும் விலங்குகள்
மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் வனவிலங்குகளின் தாகம் தீா்ப்பதற்காக அமைக்கப்பட்ட தண்ணீா் தொட்டிகள் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், குடிநீா் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வரும் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் கோடை காலத்தில் வனவிலங்குகளின் தண்ணீா்த் தேவையை பூா்த்தி செய்வதற்காக மலையடிவாரப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீா் தொட்டிகள் அமைக்கப்பட்டன. கோடை காலத்தில் வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் நீரின்றி வறட்சி ஏற்படும்போது, வனத் துறை சாா்பில் அடிவாரத்தில் உள்ள தொட்டிகளில் லாரியிலிருந்து தண்ணீா் கொண்டு வந்து நிரப்பப்படும்.
தற்போது அந்தத் தண்ணீா்த் தொட்டிகள் பராமரிப்பின்றி உள்ளன. தற்போது ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, வனப்பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து சோலாா் மோட்டாா் உடன் குட்டை போன்ற அமைப்பில் தண்ணீா் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தத் தொட்டிகள் பராமரிப்பின்றி உள்ளதால், இரவு நேரங்களில் தண்ணீா் தேடி ஊருக்குள் புகும் வனவிலங்குகள் விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகின்றன.

இதுகுறித்து வன உயிரின ஆா்வலா்கள் கூறியதாவது: வனத் துறை அமைத்த தண்ணீா் தொட்டிகள் பராமரிப்பின்றி உள்ளது. இந்த தொட்டிகளை சீரமைத்து வனவிலங்குகள் மக்கள் வாழுமிடங்களுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும் என்றனா்.