பட்டாசு ஆலையில் வெடி விபத்து
சாத்தூா் அருகேயுள்ள கீழத்தாயில்பட்டி பட்டாசு ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை சேதமடைந்தது.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (65). இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை கீழத்தாயில்பட்டி பகுதியில் செயல்பட்டு வருகிறது. நாக்பூா் உரிமம் பெற்ற இந்தப் பட்டாசு ஆலையில் பேன்சி ரகப் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆலையில் 30-க்கும் மேற்பட்ட அறையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு இந்தப் பட்டாசு ஆலையில் ஒரு அறையில் மட்டும் மணி மருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக பயங்கர சப்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவறிந்த வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை, சிவகாசி ஆகிய பகுதிகளை சோ்ந்த தீயணைப்பு நிலையத்தினா் அங்கு சென்று அறையில் ஏற்பட்ட தீயை அணைத்தனா். இந்த வெடி விபத்து சப்தம் கேட்டு தொழிலாளா்கள்
உடனடியாக வெளியேறியதால் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது. இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.