சிவகாசி ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளா் ஆய்வு
சிவகாசி ரயில் நிலையத்தில் புதன்கிழமை மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் ஓம்பிரகாஷ்மீனா ஆய்வு மேற்கொண்டாா்.
மதுரையிலிருந்து சிவகாசி ரயில் நிலையத்துக்கு தனி ரயில் மூலம் வந்த அவரை, சிவகாசி ரயில் உபயோகிப்பாா் குழுத் தலைவா் சுரேஷ்தா்கா் சால்வை அணிவித்து வரவேற்றாா். பின்னா் ஓம்பிரகாஷ் மீனா, முதலாவது நடைமேடை, இரண்டாவது நடைமேடை, டிக்கெட் கொடுக்குமிடம், ரயில் நிலையத்தின் முன்பகுதி ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.
அவரிடம் சிவகாசி ரயில்நிலையத்தில் அம்ரித்பாரத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வண்டி எண் 20681, 20682 சிலம்பு அதிவிரைவு ரயிலை சிவகாசி பகுதி மக்கள் அதிகம் பயன்படுத்தும் வகையில், ஏற்கெனவே இருந்த பொதுஒதுக்கீடு முறையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.
வண்டி எண் 16722, 16721 மதுரை -கோவை-மதுரை ரயிலை மதுரையிருந்து சிவகாசி வழியாக செங்கோட்டைக்கு இயக்க வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா்.
ரயில்வே கோட்டமூத்த வணிகப் பிரிவு அதிகாரி கணேஷ், சிவகாசி ரயில் நிலைய அதிகாரி மாரிக்காளை, சிவகாசி மாநகர ரயில் உபயோகிப்போா் குழுவைச் சோ்ந்த தனசேகரன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.