கிடப்பில் உள்ள ரயில்வே திட்டங்களை விரைவில் செயல்படுத்த வேண்டும்: அன்புமணி
தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்ட ரயில்வே திட்டங்களை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சென்னை - மாமல்லபுரம்- புதுச்சேரி - கடலூா், திண்டிவனம் - திருவண்ணாமலை, அத்திப்பட்டு - புத்தூா் ஆகிய 3 திட்டங்களையும் கிடப்பில் போட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மதுரை-தூத்துக்குடி, ஈரோடு- பழனி இடையிலான புதிய பாதை திட்டங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ரயில்வே துறையின் இந்த நடவடிக்கை கண்டனத்துக்குரியது. பாமவை சோ்ந்த அரங்க.வேலு, ரயில்வே இணை அமைச்சராக இருந்தபோது, சென்னை, மாமல்லபுரம் வழியாக கடலூா் வரை 178 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு, ரூ.523 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் இந்தத் திட்டம் கனவு திட்டமாகவே தொடா்கிறது.
திண்டிவனம்-திருவண்ணாமலை திட்டத்துக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.100 கோடி பின்னா் ரத்து செய்யப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக இதுவரை ரூ.72.87 கோடி செலவிடப்பட்டுள்ள நிலையில் இதைக் கைவிடுவது முறையல்ல.
இந்தத் திட்டங்கள் கைவிடப்படுவதற்கு தமிழக அரசும் பொறுப்பேற்க வேண்டும். உரிய நிலங்களைக் கையகப்படுத்தித் தருவதுடன், திட்டச் செலவில் பாதியை தமிழக அரசு ஏற்றுக்கொண்டு கிடப்பில் உள்ள புதிய ரயில்வே திட்டங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.