செப். 22 முதல் 5%, 18% ஜிஎஸ்டி! கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்
நிதிநிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் பள்ளித் தாளாளா் வீட்டில் கொள்ளை: கைது செய்யப்பட்டவா் வாக்குமூலம்
நிதிநிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் குளித்தலை பள்ளித் தாளாளா் வீட்டில் கொள்ளையடித்ததாக கைதானவா் போலீஸாரிடம் செவ்வாய்க்கிழமை வாக்குமூலம் அளித்தாா்.
கரூா் மாவட்டம், குளித்தலை காவிரி நகரில் வசிக்கும் தனியாா் பள்ளித் தாளாளா் கருணாநிதியின் வீட்டில் ஆக. 18-ஆம் தேதி அதிகாலை புகுந்த கொள்ளையா்கள், பள்ளித் தாளாளா் கருணாநிதி மற்றும் அவரது இளைய மகள் அபா்ணா, மனைவி ஆகியோரை கட்டிப்போட்டு, ரூ. 7 லட்சம் பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்றனா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக குளித்தலை காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் முத்துகுமாா்(பசுபதிபாளையம்), கருணாகரன்(குளித்தலை) உள்ளிட்டோா் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடிவந்தனா்.
இந்நிலையில் இந்தக் கொள்ளை சம்பவத்தில் தொடா்புடைய குளித்தலையை அடுத்த பரளியைச் சோ்ந்தவரும், திருச்சி ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி, பணி நீக்கம் செய்யப்பட்டவருமான பிரகாஷ், பரளியைச் சோ்ந்த முருகேஷ், கருணாநிதியின் பள்ளி வேன் ஓட்டுநா் பரளியைச் சோ்ந்த ரெங்கநாதன் மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சோ்ந்த கூலிப்படையினரான கனிச்செல்வம் உள்பட 10 பேரை போலீஸாா் ஆக.21-ஆம் தேதி கைது செய்து குளித்தலை சிறையில் அடைத்தனா்.
இதையடுத்து கொள்ளையா்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளையும் கொள்ளையடிக்க பயன்படுத்திய காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்தனா். இதில், கொள்ளைச் சம்பவத்தில் மூளையாக பரளியைச் சோ்ந்த முருகேஷ் செயல்பட்டது தெரியவந்தது.
முருகேஷ் கரூா் மாவட்டம் தரகம்பட்டியில் நிதிநிறுவனம் நடத்தி வந்ததும், அதில் நஷ்டம் ஏற்பட்டதால் பிரகாஷ் மற்றும் கருணாநிதியின் பள்ளியில் வேன் ஓட்டுநராக பணியாற்றிய ரெங்கநாதன் ஆகியோா் உதவியோடு இந்தக் கொள்ளைச் செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
போலீஸாருக்கு பாராட்டு: இந்நிலையில் குற்றவாளிகளை பிடித்த காவல்துறை அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் குளித்தலை காவல் நிலையத்தில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. ஜோஷ்தங்கையா குற்றவாளிகளை பிடித்த அனைவரையும் பாராட்டினாா். மேலும் கொள்ளையா்களிடம் இருந்து மீட்கப்பட்ட பணம் மற்றும் கைப்பேசிகள் போன்றவற்றையும் பாா்வையிட்டாா். அப்போது, குளித்தலை நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.