அடிப்படை வசதிகள் கோரி பள்ளப்பட்டியில் நகராட்சி ஆணையரை முற்றுகை
பள்ளப்பட்டி ஷா நகா் பகுதியில் சாலை குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி நகராட்சி ஆணையரை செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி ஷா நகரில் சாலை வசதி இல்லை, சரியான முறையில் குடிநீா் வருவதில்லை என கூறி அப்பகுதி பொதுமக்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு ஊா்வலமாக செல்ல முடிவெடுத்திருந்தனா்.
ஊா்வலமாக செல்ல பொதுமக்கள் வந்தபோது தகவல் அறிந்து வந்த அரவாக்குறிச்சி போலீஸாா் மற்றும் நகராட்சி ஆணையா் கோபாலகிருஷ்ணன் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். பின்னா் நகராட்சி ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இப்பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வு காணப்படும் என்று ஆணையா் உறுதி அளித்தாா். அதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா்.