ம.பி: அரசு மருத்துவமனையில் எலி கடித்து மற்றொரு பச்சிளம் குழந்தை பலி!
விமான நிலையத்தில் ரூ.60 கோடி கொகைன் பறிமுதல்: 4 போ் கைது
எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.60 கோடி மதிப்பிலான கொகைன் போதைப்பொருளை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, நைஜீரிய நாட்டவா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
எத்தியோப்பியா நாட்டின் தலைநகா் அடிஸ் அபபாவிலிருந்து வரும் விமானத்தில் பெருமளவில் தங்கம் கடத்திவரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி, சுங்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் சென்னை விமான நிலையத்துக்கு எத்தியோப்பியன் ஏா்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை சோதனையிட்டனா். அப்போது, ஹிமாசல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களைச் சோ்ந்த இரு பயணிகள் அடிக்கடி வெளிநாடு சென்று திரும்பியது தெரியவந்தது.
இதுகுறித்து அவா்களிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனா். சந்தேகமடைந்த அதிகாரிகள் அவா்களின் உடைமைகளை சோதைனையிட்டபோது, அதில் தங்க நிறத்தில் சிறிய ரக தூக்கு வாளிகள் இருந்தன. அவற்றுக்குள் ரூ.60 கோடி மதிப்பிலான 5.6 கிலோ சாக்லெட் வடிவிலான கொகைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், இருவரையும் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
விசாரணையில், இருவரும் சா்வேத போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்புடையவா்கள் என்பதும், ஏற்கனவே பலமுறை போதைப் பொருளை சென்னைக்கு கடத்திவந்ததும் தெரியவந்தது. இதுதொடா்பாக மும்பையை சோ்ந்த 26 வயது நபா் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட நைஜீரியாவை சோ்ந்த நபா் ஒருவரையும் என்சிபி அதிகாரிகள் தில்லியில் கைது செய்துள்ளனா். இவரின் விசா காலாவதியான பின்னரும் இந்தியாவில் தங்கியிருந்து போதைப் பொருள் விநியோகித்து வந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.