வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி: பிரதமருக்கு கோரிக்கை
சீன ராணுவ அணிவகுப்பு! ஒன்றாகக் கலந்துகொண்ட சீன, ரஷிய, வடகொரிய அதிபர்கள்! முதல்முறை...
சீனாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் அந்த நாட்டு அதிபர் ஜின்பிங்குடன் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் கலந்துகொண்டனர்.
இவர்கள் மூவரும் முதல்முறையாக ஒன்றாகக் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி இதுவாகும்.
இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்து 80 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள தியனன் சதுக்கத்தின் மிக பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
வானத்தில் போர் விமானங்கள் பறக்க திறந்தவெளி வாகனத்தில் வந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை சீன அதிபர் ஷி ஜின்பிங் ஏற்றுக்கொண்டார்.

90 நிமிடங்கள் நடைபெற்ற அணிவகுப்பில் சீனாவின் அதிநவீன கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், போர் விமானங்கள், ராணுவத் தளவாடங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றில் சிலவற்றை முதல்முறையாக பொதுவெளியில் சீனா காட்சிப்படுத்தியது.
முதல்முறை..
சீனாவின் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ஈரான் அதிபர் மசூத் பெஜேஷ்கியன் உள்பட 26 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அமெரிக்கா தனது போட்டி நாடுகளாகக் கருதும் சீனா, ரஷியா மற்றும் வடகொரிய நாடுகளின் அதிபர்கள் மூவரும் ஒன்றாகச் சந்தித்துக் கொண்டது இதுவே முதல்முறை.
கடந்த 66 ஆண்டுகளில் சீன ராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்ட முதல் வடகொரிய அதிபர் என்ற வரலாற்றை கிம் ஜாங் பெற்றுள்ளார்.
மேலும், பாகிஸ்தான் பிரதமர், வியட்நாம் அதிபர், கம்போடியா மன்னர், மலேசியா பிரதமர், மியான்மர் ராணுவத் தலைவர், கியூபா அதிபர் உள்ளிட்டோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

ஐரோப்பியா ஒன்றியத்தைப் பொருத்தவரை செர்பிய அதிபர் மற்றும் ஸ்லோவாக்கியா பிரதமரைத் தவிர வேறு யாரும் கலந்துகொள்ளவில்லை.
அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவில்லை. எஸ்சிஓ மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இரண்டு நாளுக்கு முன் பெய்ஜிங் சென்றிருந்த பிரதமர் மோடி, ராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்ளாமல் இந்தியா திரும்பிவிட்டார்.
அமெரிக்காவுக்கு எதிரான சதியா?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பால் சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகளாவிய பதற்றத்துக்கு மத்தியில், சீனா, ரஷ்யா மற்றும் வட கொரியா ஆகிய மூன்று நாடுகளும் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, பெய்ஜிங்கில் ரஷிய அதிபர் புதினும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சந்தித்து, சுமார் இரண்டரை மணிநேரம் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
சீன ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியையும் மூவர் சந்திப்பையும் விமர்சித்து டிரம்ப் வெளியிட்ட பதிவில்,
”வெளிநாட்டு படையெடுப்பாளர்களிடம் இருந்து சீனா சுதந்திரம் பெறுவதற்காக அமெரிக்கா அளித்த மகத்தான ஆதரவையும், அமெரிக்கர்கள் சிந்திய ரத்தத்தையும் அதிபர் ஜின்பிங் குறிப்பிடுவாரா என்பது மிகப்பெரிய கேள்வி.
சீன வெற்றிக்காக பலியான அமெரிக்கர்கள் மதிக்கப்படுவார்கள், நினைவுகூரப்படுவார்கள் என்று நம்புகிறேன். அமெரிக்காவுக்கு எதிராகச் செய்யும் சதிகளுக்கு புதின் மற்றும் கிம் ஜாங் உன்னுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அமெரிக்காவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட்டதாக தெரிவித்த டிரம்ப்பின் கருத்தை ரஷியா மறுத்துள்ளது.