வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி: பிரதமருக்கு கோரிக்கை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.
வட மாநிலங்களான ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ஹிமாசலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்கள் கனமழை மற்றும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வீடுகள், சாலைகள் சேதமடைந்துள்ளதால் மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உயிர் பலிகளும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உடனடியாக நிதி வழங்க வேண்டும் என ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக விடியோ வெளியிட்டுள்ள அவர்,
பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு இதனைக் கொண்டுவர விரும்புகிறேன். பஞ்சாபில் வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களின் நிலைமை மிகவும் கவலையளிக்கிறது.
இத்தகைய கடினமான நேரத்தில், உங்கள் கவனமும் மத்திய அரசின் தீவிர உதவியும் மிகவும் அவசியமாக உள்ளது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகள், உயிர்கள் மற்றும் அன்புக்குரியவர்களைக் காப்பாற்ற போராடி வருகின்றன.
இந்த மாநிலங்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு - உடனடியாக ஒரு சிறப்பு நிவாரணம் அறிவிக்கப்பட வேண்டும் என்றும், நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | பஞ்சாப் வெள்ளம்: 5,500 மக்கள், 300 துணை ராணுவ வீரர்கள் மீட்பு!