"நீங்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டாலும்..." - இந்திய அணியில் இடம்பிடிக்கப் போராடும் புவனேஷ்வர்
இந்திய அணியில் ரெட் பால், ஒயிட் பால் என இரண்டிலும் சிறந்த ஸ்விங் வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான புவனேஷ்வர் குமார் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க இரண்டாண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறார்.
கடைசியாக 2022 நவம்பரில் நியூசிலாந்துக்கெதிரான டி20 போட்டியில் இந்திய அணியில் ஆடியிருந்தார்.
கடந்த ஐ.பி.எல் சீசனில் ஆர்.சி.பி அணியில் 17 விக்கெட்டுகள் வீழ்த்திய புவனேஷ்வர் குமார், 18 வருடங்களுக்குப் பிறகு முதல்முறையாக ஆர்.சி.பி கோப்பை வென்றதில் முக்கிய பங்காற்றினார்.

தற்போது, உத்தரப்பிரதேச டி20 லீக்கில் லக்னோ அணிக்காக விளையாடிவருகிறார்.
இந்த நிலையில், டைனிக் ஜாக்ரான் ஊடகத்துடனான நேர்காணலில் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெறாதது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அந்த நேர்காணலில், மீண்டும் தங்களை இந்திய அணியில் பார்க்க முடியுமா என்ற கேள்விக்கு, "தேர்வுக் குழுவினர் மட்டுமே அதற்குப் பதிலளிக்க முடியும்" என்று பதிலளித்த புவனேஷ்வர் குமார், "களத்தில் என்னுடைய 100 சதவிகித உழைப்பையும் கொடுப்பதே என் வேலை.
உத்தரப்பிரதேச லீக்கிற்குப் பிறகு சையது முஷ்டாக் அலி, ரஞ்சி அல்லது ஒருநாள் ஃபார்மெட்டுகளில் உத்தரப்பிரதேச அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தால், அங்கும் என்னால் முடிந்த அனைத்தையும் வழங்குவேன்.
ஒரு ஒழுக்கமான பந்து வீச்சாளராக, எனது கவனம் முழுவதும் ஃபிட்னஸ் மற்றும் லைன் & லெந்த்தில் உள்ளது.

அதேசமயம், நீங்கள் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டாலும், சில நேரங்களில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது.
இருப்பினும், உங்கள் செயல்திறன் மிக முக்கியமானது. யாராவது தொடர்ந்து நன்றாக கிரிக்கெட் விளையாடினால், அவர்களை நீண்ட காலத்திற்குப் புறக்கணிக்க முடியாது.
நீங்கள் தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும், உங்கள் 100 சதவிகித உழைப்பை வழங்குவதில் கவனம் செலுத்துங்கள். பிறகு மீதமுள்ளவை தேர்வாளர்களைப் பொறுத்தது. ராஜீவ் சுக்லா (BCCI இடைக்கால தலைவர்) இருப்பதால், திறமையைப் புறக்கணிப்பது கடினம்" என்று கூறினார்.