ம.பி: அரசு மருத்துவமனையில் எலி கடித்து மற்றொரு பச்சிளம் குழந்தை பலி!
மத்தியப் பிரதேசத்தின், இந்தூர் அரசு மருத்துவமனையில் எலி கடித்து படுகாயமடைந்த, மற்றொரு பச்சிளம் குழந்தையும் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தூர் மாவட்டத்தில் உள்ள, மஹாராஜா யஷ்வந்த் ராவ் அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டிருந்த 2 பச்சிளம் குழந்தைகளை ஆக.31 மற்றும் செப்.1 ஆகிய இருநாள்களின் நள்ளிரவில் ஒன்றன் பின் ஒன்றாக எலி கடித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், படுகாயமடைந்த அந்தக் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று (செப்.2) காலை ஒரு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இதனைத் தொடர்ந்து, எலி கடித்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றொரு குழந்தையும், இன்று (செப்.3) மதியம் 1 மணியளவில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், தற்போது பலியானது பிறந்து 3 முதல் 4 நாள்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம், பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில், மத்தியப் பிரதேசத்தின் துணை முதல்வரும், அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சருமான ராஜேந்திர சுக்லா, இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள உயர்நிலை அதிகாரிகள் கொண்ட குழுவொன்றை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ரீல்ஸ் விடியோவுக்கு நடனமாடிய தேஜஸ்வி யாதவ்!