அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்து கருத்து: ராகுல் மனு மீதான தீா்ப்பு ஒத்திவைப்...
சாலையில் நடனம்: அராஜகத்தை ஊக்குவிக்கிறார் தேஜஸ்வி - பாஜக
ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் விதிமுறைகளுக்கு மாறாக சாலையில் நடனமாடி அராஜகத்தை ஊக்குவிப்பதாக பாரதிய ஜனதா கட்சி விமர்சித்துள்ளது.
மேலும், கட்சியின் தலைவராக இருந்து வழிநடத்த வேண்டியவரின் இத்தகைய செயல் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுவதாகவும், சாலை விதிகளை மீறி நடந்துகொண்டதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திள்ளது.
பிகாரில் காங்கிரஸ் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் பாஜகவின் வாக்குத் திருட்டு சம்பவத்துக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மக்களை ஒன்றிணைக்கும் வகையிலும் வாக்குரிமைப் பேரணி நடைபெற்றது.
தொடர்ந்து 16 நாள்கள் நடைபெற்ற இந்தப் பேரணி, நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில், பாட்னாவில் உள்ள புதிதாக திறந்துவைக்கப்பட்ட சாலையில், பேரணி நிறைவு பெற்ற நள்ளிரவில் இளைஞர்களுடன் சேர்ந்து தேஜஸ்வி யாதவ் நடனமாடியுள்ளார். இந்த விடியோவை தேஜஸ்வியின் சகோதரி ரோஹினி யாதவ் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில் பலரால் இந்த விடியோ பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த விடியோ குறித்து பதிவிட்டுள்ள பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் அஜய் அலோக், பொறுப்பற்ற தன்மையுடன் தேஜஸ்வி நடந்துகொண்டதாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக தேஜஸ்வியின் விடியோவை பகிர்ந்து, அவர் பதிவிட்டுள்ளதாவது,
''பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவரால் மட்டுமே நள்ளிரவில் சாலையில் ரீல்ஸ் விடியோவுக்காக நடனமாடவும் பாட்டுப் பாடவும் முடியும். ரீல்ஸ் எடுக்கும்போது சாலையில் எத்தனை விபத்துகள் நடக்கின்றன என்பது அவர்களுக்குத் தெரியுமா? இது அராஜக செயலை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது.
ஜேபி சாலை ஒன்றும் சுற்றுலாத் தலம் அல்ல. பிகார் காவல் துறை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், மாநிலத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் ரீல்ஸ்களால் நிரம்பிவிடும்'' எனப் பதிவிட்டுள்ளார்.
பிகாரில் சிறந்த ஆட்சி நடைபெற்று வருவதால், புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் நடு இரவில் இளைஞர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் நடனமாடி வருவதாக மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மாஞ்சி தெரிவித்துள்ளார். இதே லாலு பிரசாத் ஆட்சியாக இருந்தால், குண்டர்களால் கடத்தப்பட்டு துப்பாக்கி முனையில் நடனமாட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் எனப்பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு! எத்தனை ரயில் நிலையங்கள்?