ஜம்மு - காஷ்மீரில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பிரசவம்!
ஜம்மு - காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில், ஓடும் ரயிலில் பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ராம்பன் மாவட்டத்தின் சும்பெர் கிராமத்தைச் சேர்ந்த, நிறைமாத கர்பிணியான அக்தெரா பானோ (வயது 21), ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்காக தனது கணவருடன் ரயிலில் சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது, அவருக்கு அந்த ரயிலில் செல்லும் வழியிலேயே திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ரயிலில் இருந்த பயணிகள் இருவர் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவருக்கு ஓடும் ரயிலிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதில், ரயில்வே பணியாளர்கள் மற்றும் ரயில்வே போலீஸார் அவருக்கு உதவி செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், அந்த ரயிலானது பனிஹல் ரயில் நிலையத்தை அடைந்தவுடன், அங்கு அவரை அவசர ஊர்தியின் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அக்தெராவுக்கும் அவரது குழந்தைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இருவரும் தற்போது நலமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பஞ்சாப் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு