பஞ்சாப் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு
பஞ்சாபில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
வெள்ளம் சூழ்ந்த இடங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக பஞ்சாப் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பஞ்சாபில் பெய்து வரும் தொடர் கனமழையால் அமிர்தசரஸ், பட்டியாலா, குர்தாஸ்பூர், லூதியானா, பதான்கோட் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மாநிலம் முழுவதும் 1,655 கிராமங்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. அதிகபட்சமாக அமிர்தசரஸ் மாவட்டத்தில் 190 கிராமங்களும், குர்தாஸ்பூரில் 324 கிராமங்களும், கபுர்தாலாவில் 123 கிராமங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் 3.55 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக ஹோஷியார்பூரில் 7 பேரும், பதான்கோட்டில் 6 பேரும், பர்னாலாவில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கும் பாதிக்கப்பட்டோருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பஞ்சாபின் பல்வேறு மாநிலங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், இந்த பாதிப்பு பேரிடராக மாநில அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி: பிரதமருக்கு கோரிக்கை