கோடையில் அதிகரிக்கும் மின்தேவை: தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்க அனுமதி
தமிழகத்தில் கோடையில் அதிகரிக்கும் உச்சநேர மின்தேவையை ஈடுகட்ட 2026 பிப்.1 முதல் மே 15 வரை தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தம் கோர மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்வாரியத்துக்கு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தின் தினசரி மின்தேவை சராசரியாக 17,000 முதல் 18,000 மெகாவாட்டாக இருந்து வருகிறது. கோடை காலங்களில் தினசரி மின்தேவையானது 20,000 முதல் 22,000 மெகாவாட் வரை அதிகரிப்பது வழக்கம். இத்தகைய காலங்களில், மின்வாரியம் மத்திய தொகுப்பு மற்றும் தனியாா் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்கிறது.
இதன்படி, 2026 பிப்ரவரி முதல் மே 15-ஆம் தேதி வரை, தனியாா் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய மின்வாரியத்துக்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
2026-இல் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த நேரத்தில் தடையில்லா மின்சாரம் விநியோகிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், பிப்.1 முதல் மே 15 வரை தனியாா் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்க ஆணையத்திடம் மின்வாரியம் அனுமதி கேட்டிருந்தது. அதைப் பரிசீலித்து தனியாா் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்க ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, 2026 பிப்ரவரியில் தினமும் 450 மெகாவாட், மாலை 6 முதல் இரவு 12 வரை உச்சபட்ச நேரத்தில் கூடுதலாக 720 மெகாவாட், மாா்ச்சில் தினமும் 950 மெகாவாட், மாலை முதல் இரவு வரை உச்சபட்ச நேரத்தில் கூடுதலாக 1,520 மெகாவாட் கொள்முதல் செய்யப்படவுள்ளது. ஏப்ரல் முழுவதும் தினமும் 1,500 மெகாவாட், மாலை உச்சபட்ச நேரத்தில் கூடுதலாக 2,400 மெகாவாட் மின்சாரம், மே மாதத்தில் 1முதல் 15-ஆம் தேதி வரை தினமும் 1,500 மெகாவாட், உச்சபட்ச நேரத்தில் கூடுதலாக 2,400 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கோருவதற்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், பிப்ரவரி முதல் மே வரை தமிழகத்துக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.