``இந்தியா உடனான உங்களது உறவை மதிக்கிறேன்; ஆனால்'' - புதினிடம் பாகிஸ்தான் பிரதமர்...
தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா உள்ளிட்டோருக்கு ரூ.270 கோடி அபராதம்
தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவ் உள்ளிட்ட 4 பேருக்கு வருவாய் புலனாய்வு இயக்குநரகம் ரூ.270 கோடி அபராதம் விதித்து, நோட்டீஸ் அளித்துள்ளது.
கடந்த மார்ச் 3-ஆம் தேதி துபையில் இருந்து பெங்களூருக்கு வந்த ரன்யா ராவ், சட்டவிரோதமாக ரூ.12.50 கோடி மதிப்புள்ள 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததை மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கண்டுபிடித்து கைதுசெய்தனர்.
2023 முதல் 2025-ஆம் ஆண்டுவரை 34 முறை துபைக்கு சென்று வந்துள்ள ரன்யா ராவ், சட்டவிரோதமாக ரூ.40 கோடி மதிப்புள்ள 49.6 கிலோ தங்கம் கடத்தியதோடு, வரிஏய்ப்பு, பணப்பதுக்கல் போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பான வழக்கை பதிவுசெய்து விசாரித்து வரும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம், உரிய காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்பதால், ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. எனினும், அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகளின் தடுப்புச் சட்டம் (கோஃபிபோசா) வழக்கிலும் கைதுசெய்யப்பட்டுள்ளதால், தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். ரன்யா ராவ், கர்நாடகத்தில் டிஜிபி பதவியில் உள்ள கே.ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகள் ஆவார்.
இதனிடையே, இதே வழக்கில் கடந்த மார்ச் 9, 26-ஆம் தேதிகளில் பெல்லாரியைச் சேர்ந்த தங்க வியாபாரிகள் தருண் கொண்டராஜு, சாஹில் சகாரியா ஜெயின், ஜூலை 23-இல் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த ஹவாலா மற்றும் தங்க வியாபாரி பரத்குமார் ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, ரன்யா ராவ், தருண் கொண்டராஜு, சாஹில் சகாரியா ஜெயின், பரத்குமார் ஜெயின் ஆகியோருக்கு செவ்வாய்க்கிழமை ரூ.270 கோடி அபராதம் விதித்த வருவாய் புலனாய்வு இயக்குநரகம், விளக்கம் கேட்டு தனித்தனியே நோட்டீஸ் அளித்துள்ளது.
தில்லியில் இருந்து பெங்களூருக்கு செவ்வாய்க்கிழமை வந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேருக்கும் குற்றங்கள் செய்ததற்கான ஆதாரங்களுடன் தலா 2,500 பக்கங்கள் இணைப்பு கொண்ட தலா 250 பக்கங்கள் அடங்கிய நோட்டீûஸ அளித்தனர். மொத்தமாக 11,000 பக்கங்கள் கொண்ட நோட்டீûஸ வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அளித்துள்ளனர்.
மொத்தம் 127 கிலோ தங்கத்தை கடத்தியதற்காக ரூ.270 கோடி அபராதம் விதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில், 49.6 கிலோ தங்கம் கடத்தியதற்காக ரன்யா ராவுக்கு ரூ.102.55 கோடி, 72.6 கிலோ தங்கம் கடத்தியதற்காக தருண் கொண்டராஜுவுக்கு ரூ.62 கோடி, தலா 63.61 கிலோ தங்கம் கடத்தியதற்காக சாஹில் சகாரியா ஜெயின், பரத்குமார் ஜெயினுக்கு தலா ரூ.53 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சுங்கவரி சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ரன்யா ராவுக்கு எதிரான கோஃபிபோசா தொடர்பான வழக்கு விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன் அடுத்த விசாரணையை செப். 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.