``ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்'' - ஆடு, டிவி, அடுப்பு, பாத்திரங்கள...
மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி மறுப்பு: தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி
நமது நிருபர்
தமிழ்நாட்டில் மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க மறுத்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வு திங்கள்கிழமை பரிசீலித்து, "ஏற்கெனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்தவொரு மாற்றத்தையும் செய்ய வேண்டியதில்லை' என்று கூறி மக்கள் நல பணியாளர்கள் மறுவாழ்வு சங்கத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தமிழ்நாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தவும் அவர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கவும் உத்தரவிடக் கோரி மக்கள் நலப் பணியாளர்கள் மறுவாழ்வு சங்கம் சார்பில் முன்பு வழக்குத் தொடரப்பட்டது.
அந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த தமிழக அரசு, மக்கள் நல பணியாளர்களை மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியமர்த்துவதாகவும், அவர்களுக்கு ரூ.7,500 வரை ஊதியம் வழங்குவதற்கு தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தது.
மேலும், வேலை இழந்த மக்கள் நலப் பணியாளர்களில் பெரும்பாலானோர் தமிழக அரசின் திட்டத்தை ஏற்கெனவே ஏற்றுக் கொண்டு அதில் கையெழுத்திட்டு பணியில் சேர்ந்துள்ளனர். ஒரு சிலர் மட்டுமே உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர். மக்கள் நலப் பணியாளர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப உரிய வேலை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியிருந்தது.
அந்த வழக்கில் 2023- ஆம் ஆண்டு ஏப்ரலில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் இருக்கும் வரை மக்கள் நலப் பணியாளர்களுக்கான வேலைத் திட்டம் தொடர வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் கூட திட்டம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.
இதை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.