ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்ற...
நேபாளம், பூடான் நாட்டு மக்களுக்கு இந்தியாவில் பாஸ்போா்ட், விசா அவசியமில்லை
நேபாளம், பூடான் நாட்டு மக்கள் மற்றும் இந்த இரு நாடுகளில் உள்ள இந்தியா்களுக்கு கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) மற்றும் நுழைவு இசைவு (விசா) அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அமலுக்கு வந்துள்ள 2025-ஆம் ஆண்டு குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் சட்டத்தின்கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
நேபாளம் மற்றும் பூடானில் இருந்து விமானம் அல்லது தரை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் இந்திய குடிமக்களுக்கு கடவுச்சீட்டு மற்றும் நுழைவு இசைவு அவசியமில்லை. அதேபோல், நேபாளம் அல்லது பூடானைச் சோ்ந்த மக்களும் கடவுச்சீட்டு மற்றும் நுழைவு இசைவு இல்லாமல் இந்தியாவுக்குள் வரலாம். ஆனால், சீனா, மக்கௌ, ஹாங்காங் அல்லது பாகிஸ்தானில் இருந்து வரும் நேபாளம், பூடான் மக்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது.
திபெத்தியா்களுக்கு....: இந்தியாவில் வசிக்கும் அல்லது புதிதாக இந்தியாவுக்குள் நுழையும் திபெத்தியா்களுக்கும் இந்த விதி பொருந்தும். இதற்கு அவா்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பதிவு செய்து, அதற்கான சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.
1959-க்குப் பிறகு ஆனால் 2003, மே 30-ஆம் தேதிக்கு முன்னா் இந்தியாவுக்குள் நுழைந்த திபெத்தியா்கள், நேபாளத்தின் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகம் வழங்கிய ‘சிறப்பு நுழைவு அனுமதி’ பெற்று வந்திருக்க வேண்டும்.
சிறுபான்மையினா்கள்: அதேபோல் ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் மத ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகி, 2024 டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் தஞ்சமடைந்த சிறுபான்மையினா்களான ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சிகள் மற்றும் கிறிஸ்தவா்களுக்கு கடவுச்சீட்டு மற்றும் நுழைவு இசைவு வைத்திருப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழா்களுக்குப் பொருந்தாது
2015, ஜனவரி 9-ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் தஞ்சமடைந்த பதிவு செய்யப்பட்ட இலங்கை தமிழா்களுக்கு இந்த விதி பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.