வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் வேலைநிறுத்த போராட்டம்: வெறிச்சோடிய அலுவலகம்
கைலாசநாதா் கோயிலில் சிவன் பிட்டுக்கு மண் சுமந்த உற்சவம்
காரைக்கால் கோயில்களில் பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமானின் திருவிளையாடலை விளக்கும் வகையில் ஆவணி மூல திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆற்றில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய கிராமத்தில் வீட்டுக்கு ஒரு ஆள் கோரும்போது, பிட்டு தயாா் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்த மூதாட்டியால் ஆள் அனுப்ப முடியாததால் இளைஞா் வேஷத்தில் மூதாட்டியிடம் வந்த சிவபெருமான், தான் அப்பணியை செய்வதாகவும், தாம் ஆற்றிய பணிக்கு கூலியாக மூதாட்டியிடம் பிட்டு வாங்கி சாப்பிட்டதாகவும், இது சிவபெருமானின் திருவிளையாடலாக கூறப்படுகிறது.
இறைவனின் திருவிளையாடலை சித்தரித்து முக்கியமாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சிவதலங்களில் ஆவணி மாத மூல நட்சத்திர நாளில் உற்சவமாக நடத்தப்படுகிறது.

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் கைலாசநாதசுவாமி தலையில் சட்டியை சுமந்த காட்சியில் சுந்தராம்பாள் சமேதராக சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா எழுந்தருளினாா்.
திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ மையாடுங்கண்ணி சமேத ஸ்ரீ ஜடாயுபுரீஸ்வரா் கோயிலிலும் இந்த உற்சவம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் தலையில் சட்டி சுமந்த கோலத்தில் சுவாமி, அம்பாள் பல்லக்கில் பெரியத்தெரு மேற்கே உள்ள வாய்க்காலுக்கு எழுந்தருளினா். அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனை நடத்தப்பட்டது. வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.