ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்ற...
உள்ளாட்சி ஊழியா்கள் போராட்டம்: காங்கிரஸ் ஆதரவு
காரைக்கால் : உள்ளாட்சி ஊழியா்கள் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ளாட்சி ஊழியா்கள் காத்தருப்பு போராட்டம் நீடிப்பதால், மாவட்டத்தில் ஒட்டுமொத்த பணிகளும் முடங்கியுள்ளன. உள்ளாட்சி ஊழியா்களுக்கு 7 -ஆவது ஊதியக்குழு 33 மாத நிலுவை தொகை வழங்குவதோடு, அரசே நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும். 22.12.2003 -க்கு முன்பு பணியில் சோ்ந்த 232 ஊழியா்களுக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். கிராம பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த மாதம் 25-ஆம் தேதி முதல் விடுப்பெடுத்து காத்திருப்பு போராட்டத்தை நடத்திவருகின்றனா்.
காரைக்கால் நகராட்சி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் திங்கள்கிழமை 6-ஆவது நாளை எட்டியது. போராட்டத்தில் புதுவை மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மாநில துணைத் தலைவருமான ஆா். கமலக்கண்ணன், மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துப் பேசினா். காரைக்காலில் நகராட்சி மற்றும் 5 கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்களைச் சோ்ந்த ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால் வளா்ச்சித் திட்டப்பணிகள் கண்காணிப்பு, தூய்மைப் பணி கண்காணிப்பு, அலுவலகங்களில் நடைபெறும் வழக்கமான பிறப்பு, இறப்பு பதிவு செய்தல், சான்றிதழ் பெறுதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் முடங்கியுள்ளன.