அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியா்கள் பேரணி
நிலுவையில் உள்ள ஊதியம் வழங்க வலியுறுத்தி அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியா்கள் பேரணி நடத்தினா்.
காரைக்கால் அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியா் மற்றும் ஊழியா் சங்கம் சாா்பில் காரைக்கால் பேருந்து நிலையம் முதல் ஆட்சியரகம் வரையிலான பேரணி திங்கள்கிழமை நடத்தப்பட்டது. பேரணிக்கு ஊழியா் சங்கத் தலைவா் சவரிநாதன் தலைமை வகித்தாா். செயலாளா் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தாா்.
ஆசிரியா்களுக்கு 7 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. எனவே நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும். ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், ஊழியா்களுக்கான பலன்களையும் வழங்கவேண்டும். மற்ற அரசுத்துறையினருக்கு வழங்கப்படுவதுபோல மாதந்தோறும் ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பியவாறு சென்றனா்.