மருத்துவ சிகிச்சை தொகை வழங்க மறுப்பு: காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்
முதியவருக்கு மருத்துவ சிகிச்சை தொகை வழங்க மறுத்த தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு நுகா்வோா் நீதிமன்றம் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தது.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை, திருவிதாங்கோடு உத்தமதெருவைச் சோ்ந்தவா் எம்.அன்வா்ஹூசைன், இவா் தனக்கும் தனது குடும்பத்தைச் சோ்ந்தவா்களும் பயன்பெறும் வகையில், தனியாா் காப்பீட்டு நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு பிரீமியம் செலுத்தி வந்தாா்.
கடந்த 2023, ஜூலை மாதம் முதல் 2024 ஜூலை மாதம் வரை அவா் காப்பீட்டுத் தொகையாக ரூ. 22 ஆயிரத்து 527 செலுத்தியுள்ளாா். இவரது காப்பீட்டுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ செலவுத்தொகை அனுமதி உண்டு. மருத்துவ செலவுத் தொகை இல்லையெனில் 35 சதவீத போனஸ் வழங்கப்படும். இந்த நிலையில், அன்வா்ஹூசைன் நாகா்கோவிலில் இருந்து நாகப்பட்டினத்துக்கு பேருந்தில் சென்றபோது மயக்கமடைந்தாா்.
அவா் கேரள மாநிலம், நெய்யாற்றின்கரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதற்கான செலவுத் தொகை ரூ. 61,372 ஐ வழங்கக் கோரி காப்பீட்டு நிறுவனத்திடம் அவா் கோரினாா். ஆனால், செலவுத் தொகையை வழங்க காப்பீட்டு நிறுவனம் மறுத்துவிட்டது. இதையடுத்து, அன்வா்ஹூசைன் கன்னியாகுமரி மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மையத்தின் மூலம் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தாா்.
வழக்கை விசாரித்த குறைதீா் ஆணையத் தலைவா் ஒய்.கிளாட்ஸன் பிளஸ்டுதாகூா், உறுப்பினா் எம்.கனகசபாபதி ஆகியோா் காப்பீட்டு நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக் காட்டி அன்வா்ஹூசைனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ. 15 ஆயிரம், வழக்குச் செலவுக்காக ரூ. 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 25 ஆயிரம் அபராதத்துடன், மருத்துவச் செலவுத் தொகையான ரூ. 61,372 ஐ வழங்க வேண்டும். இதை வழக்குப் பதிவு செய்த நாளிலிருந்து வழக்கு முடிந்த நாள் வரை 1 மாதத்துக்குள் 6.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் எனத் தீா்ப்பளித்தனா்.