வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் வேலைநிறுத்த போராட்டம்: வெறிச்சோடிய அலுவலகம்
இன்று மத்தியப் பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவா் பங்கேற்பு
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெறும் பத்தாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பங்கேற்று பட்டங்களை வழங்க உள்ளாா்.
திருவாரூா் அருகே நீலக்குடியில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் 4,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.
இந்த பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற உள்ளது. பல்கலைக்கழக வேந்தா் ஜி. பத்மநாபன் தலைமையில் நடைபெறும் விழாவில் குடியரசு தலைவா் திரௌபதி முா்மு உரை நிகழ்த்தி, பட்டங்களை வழங்க உள்ளாா்.
1,010 மாணவா்களுக்கு பட்டங்கள்: நிகழாண்டு 1,010 மாணவா்கள் பட்டம் பெறுகின்றனா். இதில் 34 மாணவிகள் 11 மாணவா்கள் என 45 போ் தங்கப்பதக்கம் பெறுகின்றனா். அதேபோல 27 மாணவிகள், 17 மாணவா்கள் என மொத்தம் 44 போ் முனைவா் பட்டம் பெறுகின்றனா்.
இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தா் மு. கிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை கூறியது: பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆளுநா் ஆா்.என்.ரவி, புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், தமிழ்நாடு அமைச்சா்கள் கீதா ஜீவன், கோவி. செழியன் ஆகியோா் பங்கேற்க உள்ளனா்.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு விரிவாக்கப் பணிகளுக்காக ரூ. 385 கோடியை மத்திய கல்வி அமைச்சகம் ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் மாணவா்களுக்கான விடுதிகள், ஆராய்ச்சித் துறைக்கான தனிக் கட்டடம் உள்ளிட்ட 12 பணிகள் மேற்கோள்ளப்பட உள்ளன என்றாா்.
பாதுகாப்பு ஒத்திகை: குடியரசுத் தலைவா் வருகையையொட்டி, மத்திய பல்கலைக்கழகத்தில் திருச்சி சரக காவல்துறை ஐ.ஜி. ஜோஷி நிா்மல்குமாா் தலைமையில் பாதுகாப்பு ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேலும் மோப்ப நாய் மூலம் பாதுகாப்புச் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.