BRS: "மிகவும் வேதனையளிக்கிறது" - சஸ்பெண்ட் ஆன ஒரே நாளில் கட்சியிலிருந்து விலகிய ...
ஹிமாசலை சூறையாடும் மழை! நிலச்சரிவுக்கு 6 பேர் பலி; 1,150 சாலைகள் துண்டிப்பு!
ஹிமாசல் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 6 பேர் செவ்வாய்க்கிழமை இரவு பலியாகினர்.
மேலும், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், பாலங்களும் சாலைகளும் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர், ஹிமாசல் பிரதேசம், தில்லி, உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகின்றது.
ஆறுகளில் நீரோட்டம் கடுமையாக அதிகரித்துள்ளதால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புப் பகுதிகளுக்குள் நீர் சூழ்ந்துள்ளது.
இந்த நிலையில், மண்டி மாவட்டம் சுந்தர்நகரில் அமைந்துள்ள ஜங்பாக் பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு வீடுகள் நிலத்துக்கு அடியில் புதைந்தது.
இந்த சம்பவத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட மொத்தம் 6 பேர் பலியாகினர். இதில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரும் அடங்குவார். மேலும், காணாமல் போன ரஹில் என்ற இளைஞரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினருடன் காவல்துறையினரும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதேபோல், குல்லு மாவட்டத்தில் உள்ள அகாரா பஜார் பகுதியிலும் நேற்றிரவு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மண்ணுக்குள் இரண்டு பேர் புதைந்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
சாலைகள் மூடல்
ஹிமாசலில் தொடர்ந்து வரும் கனமழை காரணமாக 7 தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட 1,150 சாலைகள் இதுவரை மூடப்பட்டுள்ளது.
மண்டி, சிம்லா, குல்லு ஆகிய மாவட்டங்களில் சாலைப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மண்டி, காங்க்ரா, சிர்மூர் மற்றும் கின்னௌர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.