தொடரும் வரதட்சணை கொடுமை: பெங்களூரில் ஒரே வாரத்தில் 2வது தற்கொலை!
கர்நாடக மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் 28 வயது பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பகலகுண்டேவில் வசித்துவந்தவர் பூஜாஸ்ரீ. இவர் வங்கி ஒன்றின் காசாளராக பணியாற்றி வந்தார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நந்தீஷ்(32) என்பவரை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு ஒரு வயது பெண் குழந்தையும் உள்ளது. இவர் தனது வீட்டில் ஆகஸ்ட் 30 அன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் தாயார் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் பூஜாஸ்ரீயை அவரது கணவர் மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் கணவர் நந்தீஷ் வேறொரு பெண்ணுடனான உறவு குறித்து கேட்டபோது பூஜாஸ்ரீயை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்னை தம்பதியினர் இடையே அடிக்கடி சண்டை நிகழ்ந்துள்ளது.
இதனால் மனமுடைந்த பூஜாஸ்ரீ கணவர், குழந்தை இல்லாத நேரத்தில் தன் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் வரதட்சணை துன்புறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நந்திஷ் அவரது தாயார் சாந்தம்மா மற்றும் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நந்திஷ் ஆகஸ்ட் 31 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
கடந்த வாரம், சுத்தகுண்டேபாளையத்தில் ஐடியில் பணிபுரிந்தவர் வேலையை விட்டுவிட்டு பானிபூரி விற்றதாகவும், கர்ப்பிணி மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, 27 வயது பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட ஒரே வாரத்தில் பெங்களூரில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.