சென்னை: வடிகால் தொட்டியில் விழுந்த பெண்; சடலமாக மீட்ட காவல்துறை - என்ன நடந்தது?
சென்னை, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனி, வீரபத்திரன் கோயில் தெருவில் உள்ள ஒரு வண்டல் சேகரிப்பு தொட்டியில் (silt catch pit) பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக நேற்று காலை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினரும், தீயணைப்பு படையினர் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. அதில், ``உயிரிழந்தவர் பெயர் தீபா (41). கணவனை இழந்த இவர், கோடம்பாக்கத்தில் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில்தான், நேற்று அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இரவு நேரத்தில் அந்தப் பெண் மரப்பலகையால் மூடப்பட்டிருந்த தொட்டியின் மீது நடந்து சென்றுள்ளார்.

அப்போது பலகை உடைந்ததால் அவர் பள்ளத்தில் விழுந்துள்ளார். பள்ளத்தில் விழுந்ததில் அவரது தலை மற்றும் உதட்டில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக யாரும் கவனிக்காததால், அவர் பள்ளத்திலேயே உயிரிழந்திருக்கிறார். இது ஒரு விபத்து என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது." என்றது.
இந்த சம்பவம் குறித்து அரும்பாக்கம் மக்கள், 'மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் மாநகராட்சியின் பொறுப்பற்ற தன்மையே இந்த விபத்துக்குக் காரணம். பல இடங்களில் வடிகால் தொட்டிகள் மூடப்படாமல் அல்லது பலவீனமான பலகைகளால் மூடப்பட்டிருக்கிறது. இது பொதுமக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது." என்றனர்.
சென்னை மாநகர துணை மேயர் மகேஷ்குமார், ``மழைநீர் வடிகால் பள்ளத்தில் இருந்து அந்த பெண் மீட்கப்படவில்லை. அருகே உள்ள வண்டல் மண் சேரும் தொட்டியில் இருந்து தான் மீட்கப்பட்டு உள்ளார். அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தான் பணிகளே நடக்கும். இதன் காரணமாக அந்த பகுதியில் அந்த பெண் அதில் விழுந்து உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை” இவ்வாறு அவர் கூறினார் .