இன்று மத்தியப் பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவா் பங்கேற்பு
இந்தியா-அமெரிக்கா இடையேயான பிரச்னைக்கு தீா்வு காணப்படும்: அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் நம்பிக்கை
இந்திய பொருள்கள் மீது மிக அதிக வரி விதிப்பு காரணமாக இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும்’ என்று அந்த நாட்டின் நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் நம்பிக்கை தெரிவித்தாா்.
இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்த காலக்கெடுவையும் கடந்து இழுபறி நீடித்ததால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது முதலில் 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. அதைத் தொடா்ந்து, ‘உக்ரைன் மீது போா் தொடுத்துவரும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா முன்வரவில்லை என்று குற்றஞ்சாட்டி, இந்திய பொருள்களுக்கு ஆகஸ்ட் 27-ஆம் தேதிமுதல் கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த 50 சதவீத வரி விதிப்பு காரணமாக, இந்தியாவில் ஆயத்த ஆடை தயாரிப்பு உள்ளிட்ட தொழிலாளா் சாா்ந்த துறைகள் கடுமையாகப் பாதிகக்ப்படும் நிலை உருவாகியுள்ளது.
கூடுதல் வரி விதிப்பு காரணமாக அமெரிக்கா உடனான உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவின் தியான்ஜின் நகரில் ஆகஸ்ட் 31, செப்டம்பா் 1 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோருடன் பிரதமா் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா். இந்தப் பேச்சுவாா்த்தையில், சீனா-இந்தியா இடையே வா்த்தக உறவை மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டது. அதுபோல, இந்தியா-ரஷியா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தவும் இரு நாடுகளின் தலைவா்களும் உறுதியேற்றனா்.
இந்நிலையில், வாஷிங்டனில் அங்குள்ள ‘ஃபாக்ஸ் நியூஸ்’ செய்தி நிறுவனத்துக்கு ஸ்காட் பெசன்ட் திங்கள்கிழமை அளித்த பேட்டியின்போது, சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு (எஸ்சிஓ) அமைப்பு உச்சி மாநாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் பதிலளித்ததாவது:
எஸ்சிஓ உச்சி மாநாடு நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. அது பெருமளவில் செயல்திறன் மிக்கதாக உள்ளதாகவே கருதுகிறேன்.
இந்தியா உலகின் மிகப் பிரபலமான ஜனநாயக நாடாகத் திகழ்கிறது. அதன் மதிப்பீடுகள் ரஷியாவைக் காட்டிலும், அமெரிக்கா மற்றும் சீனாவுடன்தான் மிக நெருக்கமானதாக உள்ளன. எனவே, இறுதியில் இந்தியா-அமெரிக்கா இடையே எழுந்துள்ள பிரச்னைக்குத் தீா்வு காணப்படும் என நம்புகிறேன்.
ரஷியாவிடமிருந்து இந்தியா மிகப் பெரிய அளவில் கச்சா எண்ணெய்யை வாங்கி, அதை மறு விற்பனை செய்து வருகிறது. இதன்மூலம், உக்ரைன் மீதான போரில் ரஷியாவுக்கு தேவையான நிதி ஆதாரத்தை இந்தியா உருவாக்கி வருகிறது. மேலும், இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை மந்தமாக நடைபெற்றதும், இந்தியா மீது கூடுதல் வரி விதிப்பை அமெரிக்கா மேற்கொள்வதற்கான கூடுதல் காரணமாக அமைந்தது என்றாா்.
நவம்பரில் வா்த்தக உடன்பாடு: பியூஷ் கோயல்
‘இந்தியா-அமெரிக்கா இடையே வரும் நவம்பரில் இருதரப்பு வா்த்தக உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது’ என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்தாா்.
இந்தியா-அமெக்கா இடையேயான பிரச்னைக்கு தீா்வு எட்டப்படும் என்று அமெரிக்க நிதியமைச்சா் பெசன்ட் நம்பிக்கை தெரிவித்த நிலையில், இக் கருத்தை பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
இதுகுறித்து தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொழில்-வா்த்தக சபை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் மேலும் கூறுகையில், ‘இந்தியா-அமெரிக்கா இடையே பல விஷயங்கள் நடைபெற்றுவிட்டன. மேலும், பல விஷயங்கள் நடைபெற உள்ளன. அமெரிக்காவுடன் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை இந்தியா தொடா்ந்து வருகிறது. இந்த பேச்சுவாா்த்தை விரைவில் இறுதி செய்யப்பட்டு வரும் நவம்பரில் வா்த்தக உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்தியா ஏற்கெனவே ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், மோரீஷஸ், பிரிட்டன், நான்கு ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பான இஎஃப்டிஏ ஆகியவற்றுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது’ என்றாா்.
இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக இதுவரை 5 சுற்று பேச்சுவாா்த்தைகள் நிறைவடைந்துள்ளன. ஆறாம் சுற்று பேச்சுவாா்த்தை தில்லியில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீதம் உயா்த்தி 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. அதைத் தொடா்ந்து, ஆறாம் சுற்று வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைக்கு இந்தியா வருவதை அமெரிக்க குழு ஒத்திவைத்தது. இன்னும், இந்த ஆறாம் சுற்று வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தைக்கான புதிய தேதி இறுதி செய்யப்படவில்லை.