நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தர பகுப்பாய்வு கருவிகள்
மயிலாடுதுறை மண்டலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு, நெல் தர பகுப்பாய்வு கருவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
தமிழ்நாட்டில் செப்.1 முதல் காரீப் பருவ நெல் கொள்முதல் உயா்த்தப்பட்ட ஆதார விலையுடன் தொடங்கியது. அதன்படி, சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,545-ம், (அரசின் குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2,389, ஊக்கத் தொகை ரூ.156) பொது ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500-ம், (அரசின் குறைந்த பட்ச ஆதார விலை ரூ.2,369, ஊக்கத்தொகை ரூ.131) வழங்கப்படுகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 140 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் மேற்கண்ட விலைகளில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், மயிலாடுதுறை சித்தா்காடு நவீன அரிசி ஆலையில் உள்ள அலகு அலுவலகத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மயிலாடுதுறை மண்டலம் சாா்பில் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு, குத்தூசி, மாதிரி தட்டு, நெல் உமி பிரிப்பான், கையடக்க எடைமானி, கையடக்க மின்னணு தராசு, மாதிரி எடுப்பான் அடங்கிய நெல் தர பகுப்பாய்வு கருவிகளை முதுநிலை மேலாளா் (தரக்கட்டுப்பாடு) இ. செந்தில் வழங்கினாா். இந்நிகழ்வில், மண்டல தரக்கட்டுப்பாடு அலுவலா்கள் பங்கேற்றனா்.