India - USA: `இந்தியா - அமெரிக்கா உறவு ஒருதலைபட்சமாகவே இருந்தது’ - என்ன சொல்கிறார் அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றபோது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான உறவில் நெருக்கமான சூழலே நிலவியது.
உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் இந்தியாவை தொடர்புபடுத்தத் தொடங்கியதிலிருந்து இந்த உறவில் விரிசல் ஆரம்பமானது.
தொடர்ந்து இந்தியா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திய அதிபர் ட்ரம்ப் ``அமெரிக்காவே முதன்மை" (America First) என்ற கொள்கையை தீவிரமாகப் பின்பற்றினார்.
இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க பொருட்களுக்குப் பல நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக தெரிவித்தார்.

இதனால் அமெரிக்க வர்த்தகர்கள் பாதிக்கப்படுவதாகவும், இது ஒரு "ஒருதலைப்பட்சமான" உறவு என்றும் விமர்சித்தார்.
அதிக இறக்குமதி வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என வெளிப்படையாகப் பேசினார்.
குறிப்பாக, ஹார்லி டேவிட்சன் (Harley-Davidson) போன்ற அமெரிக்க பைக்களுக்கு இந்தியா விதித்த அதிக வரிகளை ட்ரம்ப் பல கூட்டங்களில் குறிப்பிட்டுப் பேசினார்.
இந்த நிலையில்தான், இந்த வர்த்தகப் பிரச்னைகளைச் சரிசெய்ய அமெரிக்காவின் "பொதுப்படுத்தப்பட்ட முன்னுரிமை அமைப்பு" (Generalized System of Preferences - GSP) திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருந்த வர்த்தகச் சலுகைகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.
அதனால், அமெரிக்காவிற்குப் பல கோடி டாலர் மதிப்பிலான பொருட்களை வரி இல்லாமல் ஏற்றுமதி செய்து வந்த இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவில் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ இந்தியா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப், ``அமெரிக்கா இந்தியாவுடன் மிகவும் நன்றாகப் பழகுகிறது.

ஆனால் இந்தியாதான் அமெரிக்கா மீது அதிக வரிகளை விதித்து வருவதால் பல ஆண்டுகளாக அந்த உறவு ஒருதலைப்பட்சமாகவே இருந்தது.
நான் பதவியேற்றபோதுதான் அது மாறியது. இந்தியாவின் மீது விதிக்கப்பட்ட சில வரிகளை நீக்குவது குறித்து எந்தப் பரிசீலனையும் இல்லை. அதே நேரம் இந்தியாவுடனான எங்கள் உறவில் எந்த சிக்கலும் இல்லை." என்றார்.