மேக்கேதாட்டு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் செப். 23-இல் விசாரணை
நமது நிருபர்
புது தில்லி: மேக்கேதாட்டு திட்டம் தொடர்பான வழக்கை செப். 23}ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உத்தரவிட்டுள்ளார்.
மேக்கேதாட்டில் 67.16 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிப்பதைத் தடுக்கக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் 2018} ஆம் ஆண்டு வழக்குத் தொடுத்தது.
தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகியவற்றுக்கு இடையிலான காவிரி நதிநீர்ப் பங்கீட்டு பிரச்னை தொடர்பான வழக்கில் இறுதித் தீர்ப்பு 05.02.2007}இல் காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்டது. அதை 16.02.2018}இல் உச்சநீதிமன்றம் சில மாற்றங்களுடன் உறுதிப்படுத்தியது.
அதன்பிறகு ரூ.5,912 கோடி மதிப்பீட்டில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கையை 04.08.2018}இல் கர்நாடக அரசு அந்த மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து 17.09.2018}இல் மத்திய நீர்வள ஆணையத்துக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியது.
இதற்கிடையே, மேக்கேதாட்டு தடுப்பணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 22.11.2018}இல் கர்நாடகத்துக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியது. இதற்குத் தடை கோரி தமிழகம் சார்பில் 30.11.2018}இல் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், மேக்கேதாட்டு வழக்கை விரைந்து விசாரிக்குமாறு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை கர்நாடக அரசு முறையிட்டது. இதையடுத்து, இந்த வழக்கை செப்டம்பர் 23}ஆம் தேதி முன்னிலைப்படுத்திப் பட்டியலிடுமாறு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் உத்தரவிட்டார்.