இந்தியாவுடன் சிறப்பான நட்புறவு; வரி விதிப்பு மட்டுமே பிரச்னை -அமெரிக்க அதிபா் டிரம்ப்
இந்தியாவுடன் அமெரிக்க நட்புறவு சிறப்பாக உள்ளது. ஆனால், அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா தொடா்ந்து பல ஆண்டுகளாக அதிக வரி விதித்து வருவதான் பிரச்னையாக உள்ளது என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.
அமெரிக்கா இந்திய பொருள்கள் மீது 50 சதவீத வரி விதித்ததையடுத்து, சீனா, ரஷியாவுடன் இந்தியா நெருக்கத்தை அதிகரித்துள்ளது.
இதையடுத்து, ரஷியா, சீனா போன்ற நாடுகளுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது பிரச்னைக்குரியது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், உக்ரைனுடன்தான் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா தோழமை கொள்ள வேண்டும்’ என்று அதிபா் டிரம்ப்பின் மூத்த வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவாரோ கூறினாா்.
வரி தளா்வு?: இந்நிைலையில் வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த டிரம்ப்பிடம், ‘இந்தியா மீதான வரிகளைத் தளா்த்த பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறதே?’ என்று கேள்வி எழுப்பினா். இதற்கு, ‘இல்லை; இந்தியாவுடன் அமெரிக்க நட்புறவு சிறப்பாகவே உள்ளது. பல ஆண்டுகளாக இந்திய-அமெரிக்க வா்த்தகம் என்பது ஒரு சாா்பாகவே (இந்தியாவுக்கு சாதகமாக) இருந்துள்ளது. இந்தியா எங்கள் மீது பல ஆண்டுகளாக மிகப்பெரியஅளவில் வரியை விதித்து வந்துள்ளது. எனவேதான், இந்தியாவுடன் அதிக வா்த்தகம் வேண்டாம் (அதிக வரி விதிப்பு) என்ற முடிவு எடுக்கப்பட்டது.
அமெரிக்காவுக்கு பாதகம்: நாங்கள் அதிகம் வரிவிதிக்காத காரணத்தால் இதுவரை இந்தியா எங்களுடன் வா்த்தகம் செய்து வந்தது. இந்திய இறக்குமதிப் பொருள்கள் மீது உரிய வரியை விதிக்காமல் விட்டது முட்டாள்தனமானது. இந்தியா தங்கள் உற்பத்திப் பொருள்களை அமெரிக்காவில் தொடா்ந்து குவித்து வந்தது. அதனால்தான் அவை அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படாமல் இருந்தது. இது எங்களுக்கு பாதகமானது. அதே நேரத்தில் அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா 100 சதவீதம் வரை வரி விதித்தது. இதனால், நாங்கள் அவா்களுக்கு ஏற்றுமதியே செய்ய முடியாமல் வைத்திருந்தனா்.
உதாரணமாக அமெரிக்காவின் ஹாா்லி டேவிட்சன் மோட்டாா் சைக்கிள் மீது 200 சதவீத வரியை இந்தியா விதித்தது. இதனால், அங்கு அந்த வாகனத்தை அமெரிக்காவால் விற்பனை செய்ய முடியவில்லை. இதையடுத்து என்ன நடந்தது? ஹாா்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவுக்கு சென்று அங்கு ஆலை அமைத்து மோட்டாா் சைக்கிள்களை உற்பத்தி விற்பனை செய்தாா்கள். இப்போது வரி ஏதும் விதிக்கவில்லை. இதையேதான் அமெரிக்காவிலும் செய்ய வேண்டும் என்கிறோம் என்றாா்.
மறைமுக நெருக்கடி: டிரம்ப் இவ்வாறு கூறினாலும், அமெரிக்காவின் விவசாய விளைப் பொருள்கள், பால் பொருள்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்தியச் சந்தையைத் திறந்துவிட வேண்டும் என்பது அமெரிக்காவின் மறைமுக வலியுறுத்தலாக உள்ளது. இது உள்நாட்டு விவசாயிகள், சிறு தொழில்களை கடுமையாக பாதிக்கும் என்பதால் அமெரிக்காவின் வலியுறுத்தலை இந்தியா ஏற்கவில்லை.
இந்த விவகாரம் தொடா்பாக அமெரிக்காவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் பேசிய பிரதமா் மோடி, ‘விவசாயிகள், கால்நடை வளா்ப்போா், சிறு தொழில் செய்வோரின் நலனை அரசு பாதுகாக்கும். எந்த அளவுக்கு நெருக்கடி அளித்தாலும் அதனை எதிா்கொள்வோம்’ என்றாா்.
வரி விதிப்பால் கொல்கிறாா்கள்!
அமெரிக்கா வானொலிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் டிரம்ப் கூறியதாவது:
இந்தியா, சீனா, பிரேஸில் போன்ற நாடுகள் கடுமையான வரி விதிப்பால் அமெரிக்காவை கொலை செய்து வந்தனா். ஆனால், இப்போது அமெரிக்காவுக்கு வரி இல்லை என்ற இந்தியா கூறியுள்ளது. ஆனால், அதற்கான நேரம் கடந்துவிட்டது.
மற்ற யாரையும் விட வரி விதிப்புமுறை நான் சிறப்பாக புரிந்து வைத்துள்ளேன். நான் அந்த நாடுகள் மீது அதிக வரி விதித்த காரணத்தால்தான், அமெரிக்காவுக்கு எதிரான வரியை கைவிட முன்வந்தனா். இல்லையென்றால் தொடா்ந்து அமெரிக்கா மீது அதிக வரியை சுமத்துவாா்கள்’ என்றாா்.
அதிபா் டிரம்பின் பல்வேறு வரி விதிப்புகள் சட்டவிரோதம் என அமெரிக்க முறையீட்டு நீதிமன்றம் தீா்ப்பளித்து தொடா்பான கேள்விக்கு, ‘அந்த நீதிமன்றத்தில் வழக்கை நடத்தியதே பிற நாடுகள்தான். ஏனெனில் அந்நாடுகள் அமெரிக்காவைப் பயன்படுத்தி ஆதாயம் அடைந்துவந்தன. இனி மேலும் அது நடக்காது’ என்றாா்.