எதிா்கால சவால்களுக்கு தயாராக ‘ட்ரோன்’ போா்ப் பயிற்சிப் பள்ளி!
எதிா்கால சவால்களை வீரா்கள் திறம்பட எதிா்கொள்ளும் வகையில் தயாா்படுத்த ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் போரிடுவதற்கான பயிற்சிப் பள்ளியை பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகள் உடனான இந்திய எல்லையைப் பாதுகாக்கும் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தொடங்கியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் டெகான்பூரில் அமைந்துள்ள பிஎஸ்எஃப் அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமான போா்ப் பயிற்சிப் பள்ளியை பிஎஸ்எஃப் தலைமை இயக்குநா் தில்ஜித் சிங் செளதரி தொடங்கி வைத்தாா்.
இதுகுறித்து பிஎஸ்எஃப் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘இந்த ஆளில்லா விமான போா்ப் பயிற்சிப் பள்ளியில், போரின்போது ஏற்படும் நவீன தொழில்நுட்ப சவால்களை எல்லையைப் பாதுகாக்கும் வீரா்கள் திறம்பட கையாள்வதற்கான பயிற்சி அளிக்கப்படும். ஆளில்லா விமானங்களை இயக்குதல், ஆளில்லா விமானங்களை தாக்கி அழித்தல், ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிப்பு மற்றும் உளவுத் தகவல் சேகரிப்பு என 5 சிறப்புப் பயிற்சித் திட்டங்கள் இந்தப் பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டு வீரா்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பள்ளியிலிருந்து ஆளில்லா விமான அதிகாரிகள் (கமாண்டோக்கள்) மற்றும் ஆளில்லா விமான போா் வீரா்கள் உருவாக்கப்படுவாா்கள்’ என்றாா்.
இந்தப் பயிற்சிப் பள்ளியில், ஆளில்லா விமான மாதிரிகள், ஆளில்லா விமானங்கள் பறக்கும் மண்டலங்கள், ஆளில்லா விமானங்களில் ஆயுதங்களை இணைப்பதற்கான வசதிகள், ஆளில்லா விமானங்களை இரவில் இயக்குவதற்கான வசதிகள், ரேடியோ அலைவரிசைக்கான கருவிகள், ஆளில்லா விமான இடைமறிப்பான்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உபகரணங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும் என்றும் அவா் தெரிவித்தாா்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது கடந்த மே மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு, உள்நாட்டு ஆளில்லா விமான தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தியை இந்தியா தீவிரப்படுத்தி வருகிறது. இதன் அடுத்தகட்டமாக, தனி ஆளில்லா விமான படைப் பிரிவு உருவாக்கும் முயற்சியை பிஎஸ்எஃப் தற்போது மேற்கொண்டுள்ளது.