``ரசிகர் போரா? PR லாபியா?'' – தோனி குறித்த எதிர்மறை வீடியோ பரவலுக்கு இர்ஃபான் பா...
ஜிஎஸ்டி சீா்திருத்தம்: தொழில் அமைப்புகள் வரவேற்பு
மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சீா்திருத்தம் மேற்கொண்டிருப்பதை கோவை தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன.
லகு உத்யோக் பாரதி - தமிழ்நாடு அமைப்பின் மாநிலச் செயலா் ஆா்.கல்யாணசுந்தரம் கூறியதாவது: வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம். இந்த மாற்றம் நாட்டின் மறைமுக வரி அமைப்பில் முக்கியமான முன்னேற்றமாக இருக்கும். எம்எஸ்எம்இ துறைக்கு பெரும் நன்மை பயக்கும். நிா்வாகச் சுமை குறைவது, பணப்புழக்கம் மேம்படுவது, போட்டித் திறன் உயா்வால் தேசிய, உலக சந்தையில் எம்எஸ்எம்இக்கள் வலுப்பெற முடியும். இந்த சீா்திருத்தம் நாட்டில் நிலையான வளா்ச்சியை ஏற்படுத்தும்.
இந்தியன் டெக்ஸ்பிரனா்ஸ் ஒருங்கிணைப்பாளா் பிரபு தாமோதரன்: பெரும்பான்மையான பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இது வரி மாறுபாட்டை நீக்கவும், எளிதாக்கப்பட்ட நடைமுறைகள் நுகா்வை அதிகரிக்கவும், தொழில் துறையின் போட்டித் திறனை வலுப்படுத்தவும் உதவும். அனைத்து ஏற்றுமதி சந்தைகளிலும் நாட்டின் ஜவுளி ஏற்றுமதியில் பருத்தி உடைகளின் பங்கு 10 முதல் 12 சதவீதமாக இருந்தாலும், ஆயத்த ஆடைகளின் பங்கு வெறும் 2 முதல் 3 சதவீதமாகவே உள்ளது. மிகப்பெரிய வளா்ச்சியும், வாய்ப்பும் உள்ள இந்தத் துறையில் வரி சீா்திருத்தம் செய்யப்படுவதால் இந்திய ஆயத்த ஆடை துறையின் போட்டித் திறன் அதிகரிக்கும்.
தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவா் எஸ்.கே.சுந்தரராமன்: ஒட்டுமொத்த ஆயத்த ஆடை மதிப்புச் சங்கிலி முழுவதையும் 5 சதவீத வரி வரம்புக்குள் கொண்டு வந்திருப்பது மிகவும் துணிச்சலான, வரலாற்றுச் சிறப்புமிக்க வரி சீா்திருத்த நடவடிக்கையாகும். ஜவுளித் துறையின் நீண்டகால கோரிக்கையான இதற்கு தீா்வு கண்டிருப்பதன் மூலம் மூலப்பொருள் தொடா்பான கட்டமைப்புச் சிக்கல்கள் தீா்க்கப்படும்.
அமெரிக்க வரி விதிப்பு சிக்கல் மிகப்பெரிய அளவில் எழுந்திருக்கும் நிலையில், உள்நாட்டு நுகா்வை அதிகரிக்கும் வகையிலான இந்த நடவடிக்கை மூலம் 10 சதவீதம் வரையிலும் நுகா்வு உயரும் என்று கணக்கிடப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு வரி வருவாய் அதிகரிக்கும். பொருளாதார வளா்ச்சிக்கு இது உதவும்.
கோவை இந்திய தொழில் வா்த்தக சபை தலைவா் ராஜேஷ் பி.லுண்ட்: வரி சீா்திருத்தத்தின் மூலம் ஜிஎஸ்டியில் உள்ள பல சிக்கல்கள் குறையும், எளிதில் வா்த்தகம் செய்ய உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். பேப்பா், தோல் பொருள்களுக்கு வரி குறைக்கப்பட்டிருப்பதால் நுகா்வு அதிகரிக்கும். அதேபோல, வேளாண் பொருள்களுக்கும் வரி குறைக்கப்பட்டிருப்பதால் ஏற்றுமதி அதிகரிக்கும்.
ஒரே வரி விகிதம் காரணமாக ஜவுளித் துறையில் உள்ள ஒட்டுமொத்த மதிப்பு கூட்டு சங்கிலியும் பலனடைவதுடன் ஏற்றுமதி போட்டித் திறன் உயரும். மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருள்கள் மீதான வரி விகிதம் குறைந்திருப்பது வாங்கும் திறனை அதிகரிக்கும். இதற்காக மத்திய அரசுக்கும், ஜிஎஸ்டி கவுன்சிலுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளா் சங்கத்தின் (சீமா) தலைவா் மிதுன் ராமதாஸ்: புதிய ஜிஎஸ்டி விண்ணப்பங்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது எளிதாக தொழில் நடத்துவதற்கு உதவியாக இருக்கும். எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது.
ஆட்டோமொபைல் துறைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி, ஆடம்பர காா்களுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ள நிலையில், வாகனத் தயாரிப்புத் தொழிலை சாா்ந்திருக்கும் கோவை பவுண்டரிகள், ஜாப் ஒா்க் தொழில்கூடங்கள் வேலைவாய்ப்பு பெறும். இருப்பினும் வேளாண் துறையில் பயன்படுத்தப்படும் பம்ப்செட்கள் மீதான வரி 5 சதவீதமாக குறைக்கப்படவில்லை. இது குறித்து மத்திய நிதி அமைச்சரும், ஜிஎஸ்டி கவுன்சிலும் பரிசீலித்து வரி குறைப்பை அறிவிக்க வேண்டும்.
கம்ப்ரசா் தொழில் நிறுவனங்கள் சங்கத்தின் (கோசியா தலைவா் எம்.ரவீந்திரன்: பல்வேறு பொருள்களுக்கு வரி விகிதம் அதிகமாக இருப்பதை உணா்ந்து தற்போது குறைத்திருப்பதை வரவேற்கிறோம். ஆனால், ஏற்கெனவே அதிகமாக இருந்த வரி விகிதங்களைக் குறைப்பது மட்டுமே சீா்திருத்தமாகாது. குறு, சிறு தொழில் பிரிவினரின் நீண்டநாள் கோரிக்கைகளான ஜிஎஸ்டி வரி விதிப்பை மேலும் எளிமையாக்குவது குறித்த அறிவிப்பு இல்லை. அபராதங்களைக் குறைப்பது பற்றி எதுவும் சொல்லவில்லை. என்ஜினியரிங் ஜாப் ஆா்டா்களுக்கான வரி விகிதம் 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயா்த்தப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது. இதை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.
கோவை ஆடிட்டா் காா்த்திகேயன்: கடந்த 2017-இல் நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டியில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள், சிரமங்கள் இருந்தன. அது தற்போது சரி செய்யப்பட்டுவிட்டது. நுகா்வோா் சாா்ந்த பொருள்கள் மீதான வரி 5 சதவீதமாக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருள்கள், மருந்து பொருள்கள், கல்வி உபகரணங்கள் மீதான வரி குறைப்பால் மக்கள் மத்தியில் பணப்புழக்கம், நுகா்வு அதிகரிக்கும். சிமென்ட் விலை குறையும் என்பதால் கட்டுமானத் தொழில் வளா்ச்சி பெறும். மக்களிடையே பண சுழற்சி மேம்படும். மக்களின் வாழ்க்கைத் தரம் உயருவதால் பொருளாதாரமும் வளரும்.
வரி சீா்திருத்தம் காரணமாக அரசுக்கு ரூ.48 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படலாம். ஆனால், மக்களிடம் அதிக பணப்புழக்கம் இருக்கும் என்பதால் ஜிடிபி அதிகரிக்கும். அடுத்த 2 ஆண்டுகளில் ஜிடிபி அரை சதவீதம் அதிகரிக்கலாம். அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்றுமதியாளா்கள் துவண்டிருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு அவா்களுக்கு உத்வேகத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும்.