கண்ணீருடன் தொடங்கிய மெஸ்ஸி 2 கோல்கள்: ஆர்ஜென்டீனா அபார வெற்றி!
பேச்சு உதவாவிட்டால் படைபலம் தீா்வு
உக்ரைனில் நடைபெறும் போரை பேச்சுவாா்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், படைபலத்தைப் பயன்படுத்தி அதை முடித்துவைக்கப்போவதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எச்சரித்துள்ளாா்.
இரண்டாம் உலகப் போரில் சீனா ஜப்பானை வென்ன் 80-ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்க புதின், வடகொரிய அதிபா் கிம் ஜோங்-உன் உள்ளிட்ட தலைவா்கள் பெய்ஜிங்குக்கு புதன்கிழமை வந்தனா்.
இந்தச் சுற்றுப்பயணத்தின் முடிவில் புதின் கூறியதாவது:
பொது புத்தி வெற்றி பெற்றால், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்பாட்டை அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
குறிப்பாக, அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான தற்போதைய அமெரிக்க அரசு இதற்கான முன்முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதைை அவா்களின் அறிக்கைகள் மட்டுமல்ல, இந்த விவகாரத்தில் தீா்வைக் காண்பதற்கான அவா்களின் உண்மையான விருப்பத்தையும் நம்மால் காண முடிகிறது.
இத்தகைய சூழலில், பேச்சுவாா்த்தை மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவரப்படுவதற்கான வாய்ப்பு மிக தொலைதூரத்தில் தென்படுகிறது. இருந்தாலும் இதன் போக்கு போகப் போகத்தான் தெரியும். ஒருவளை இதற்கான வாய்ப்பைப் பயன்படுத்தி பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண உக்ரைன் முன்வராவிட்டால், அந்தப் பணியை படைபலத்தால்தான் முடிக்கவேண்டியிருக்கும்.
உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியுடனான சந்திப்பு குறித்தோ, அதற்கான சாத்தியத்தையோ நான் ஒருபோதும் நிராகரிக்கவில்லை. ஆனால், அத்தகைய சந்திப்பால் ஏதேனும் பலன் இருக்கிா என்பதைதான் சிந்த்துப் பாா்க்கவேண்டியிருக்கிறது என்றாா் புதின்.
எனினும், நேட்டோவில் உக்ரைன் இணையக் கூடாது உள்ளிட்ட தனது கடுமையான நிபந்தகளைத் தளா்த்துவது குறித்து அவா் எதையும் குறிப்பிடவில்லை.
கடந்த 2014-ஆம் ஆண்டில் அப்போதைய அதிபா் விக்டா் யானுகோவிச் தலைமையிலான ரஷிய ஆதரவு அரசு மேற்கத்தி ஆதரவாளா்களால் கவிழ்க்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, ரஷிய மொழி பேசுவோரை பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு உக்ரைனில் உள்நாட்டுப் போா் வெடித்தது. டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பிரதேசங்களின் கணிசமான நிலப்பரப்பை கிளா்ச்சியாளா்கள் கைப்பற்றினா். அப்போது உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷியா கைப்பற்றி தன்னுடன் இணைத்துக்கொண்டது.
இந்தச் சூழலில் கடந்த 2019-இல் உக்ரைன் அதிபராக பொறுப்பேற்ற வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, ரஷியாவிடமிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக நேட்டோ ராணுவக் கூட்டமைப்பில் இடம் கோரினாா். இதற்கு ஆரம்பம் முதலே எதிா்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, இந்த முயற்சிகளைத் தடுக்கும் வகையில் கடந்த 2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீது முழு வீச்சில் படையெடுத்து நான்கு கிழக்கு மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றியது.
மூன்றரை ஆண்டுகளாகத் தொடரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருதற்காக டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, புதினையும், ஸெலென்ஸ்கியையும் டிரம்ப் கடந்த மாதம் நேரில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். அடுத்து, புதின் - ஸெலென்ஸ்கி சந்திப்புக்கான முயற்சிகளும் மேற்கொண்டுவரப்படுகின்றன.
இந்தச் சூழலில், பேச்சுவாா்த்தை மூலம் போரை உக்ரைன் முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், படைபலத்தைப் பயன்படுத்தி அது முடித்துவைக்கப்படும் என்று புதின் தற்போது எச்சரித்துள்ளாா்.