தேசிய தரவரிசைப் பட்டியல்: சாதித்த கோவை கல்வி நிறுவனங்கள்
நாடு முழுவதிலும் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் வியாழக்கிழமை (செப்டம்பா் 4) வெளியாகி உள்ள நிலையில், அதில் கோவையைச் சோ்ந்த பல கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்காகவும், அவற்றின் தரத்தை மேம்படுத்தவும் மத்திய கல்வி அமைச்சகம் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் என்.ஐ.ஆா்.எஃப். என்ற தேசிய தரவரிசை மதிப்பீடு அமைப்பு மூலம் தரவரிசைப் பட்டியல் தயாரித்து வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2025 -ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், நாடு முழுவதிலும் உள்ள சிறந்த முதல் 100 கல்வி நிறுவனங்களுக்கான பிரிவில் தமிழ்நாட்டைச் சோ்ந்த 17 கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. இதில், கோவை பாரதியாா் பல்கலைக்கழகம் 76-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த 2020-இல் 21-ஆவது இடத்தைப் பிடித்திருந்த இந்தப் பல்கலைக்கழகம், அடுத்தடுத்த ஆண்டுகளில் 22, 24-ஆவது இடங்களைப் பிடித்திருந்த நிலையில், கடந்த ஆண்டு 44 -ஆவது இடத்தில் இருந்தது.
2023 -இல் 93 -ஆவது இடத்தைப் பிடித்திருந்த வேளாண்மைப் பல்கலைக்கழகம், கடந்த ஆண்டு பட்டியலில் இடம்பெறவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு 88 -ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை: நாடு முழுவதிலும் உள்ள சிறந்த 100 பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில் கோவை அம்ருதா விஸ்வ வித்யாபீடம் 8- ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில், பாரதியாா் பல்கலைக்கழகம் 46, வேளாண்மைப் பல்கலைக்கழகம் 73, அவினாசிலிங்கம் மனையியல், மகளிா் உயா் கல்வி நிறுவனம் 99 ஆகிய இடங்களைப் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் பாரதியாா் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு 26- ஆவது இடத்தையும், வேளாண்மைப் பல்கலைக்கழகம் 84- ஆவது இடத்தையும் பிடித்திருந்தன.
கலை, அறிவியல் கல்லூரிகள்: நாடு முழுவதிலும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான பட்டியலில் முதல் 100 இடங்களில் இந்த ஆண்டு தமிழ்நாட்டைச் சோ்ந்த 33 கல்லூரிகள் முதல் 100 இடங்களுக்குள் வந்திருக்கும் நிலையில், அதில் 7 கல்லூரிகள் கோவை மாவட்டத்தைச் சோ்ந்தவையாகும்.
கோவை பிஎஸ்ஜிஆா் கிருஷ்ணம்மாள் மகளிா் கல்லூரிக்கு தேசிய அளவில் 9 -ஆவது இடம் கிடைத்துள்ளது. பிஎஸ்ஜி கலை, அறிவியல் கல்லூரிக்கு 10 -ஆவது இடமும், ஸ்ரீகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி 50, டாக்டா் என்ஜிபி கலை, அறிவியல் கல்லூரி 66, அரசு கலைக் கல்லூரி 67, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி 76, ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரிக்கு 94 -ஆவது இடம் கிடைத்துள்ளது.
பொறியியல் கல்வி நிறுவனங்கள்: பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் அம்ருதா விஸ்வ வித்யாபீடம் 23-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரிக்கு கடந்த ஆண்டு கிடைத்த அதே 67 -ஆவது இடம் மீண்டும் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 83-ஆவது இடம் பிடித்திருந்த ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி இந்த ஆண்டு 100 -ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் கடந்த 2020-இல் கோவையை சோ்ந்த 6 நிறுவனங்கள் இடம் பெற்றிருந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாகவே 3 நிறுவனங்கள் மட்டுமே இடம் பெற்று வருகின்றன.
மருந்தியல் கல்லூரி: உதகை ஜெஎஸ்எஸ் மருந்தியல் கல்லூரி 4, அம்ருதா விஸ்வ வித்யாபீடம் 14, பிஎஸ்ஜி மருந்தியல் கல்லூரி 65, ஈரோடு நந்தா மருந்தியல் கல்லூரி 77.
சிறப்பிடம் பிடித்த அம்ருதா: ஆராய்ச்சி நிறுவனங்கள் பிரிவில் அம்ருதாவுக்கு தேசிய அளவில் 31-ஆவது இடம் கிடைத்துள்ளது. மேலாண்மைக் கல்லூரிகள் பிரிவில் அம்ருதாவுக்கு 26 -ஆவது இடமும், பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரிக்கு 84- ஆவது இடமும் கிடைத்துள்ளது. மருத்துவக் கல்லூரிகள் பிரிவில் அம்ருதாவுக்கு 9-ஆவது இடமும், பிஎஸ்ஜி மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு 43 -ஆவது இடமும் கிடைத்துள்ளது.
பல் மருத்துவக் கல்லூரிகள் பிரிவில் அம்ருதாவுக்கு 14- ஆவது இடம் கிடைத்துள்ளது. வேளாண்மைக் கல்வி நிறுவனங்கள் பிரிவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தேசிய அளவில் 6-ஆவது இடம் பிடித்துள்ளது. மாநில பொதுப் பல்கலைக்கழக பிரிவில் பாரதியாா் பல்கலைக்கழகத்துக்கு 10-ஆவது இடமும், வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு 42 -ஆவது இடமும் கிடைத்துள்ளது.