சிக்கல் ரயில்வே கேட் நீண்ட நேரம் திறக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி
நாகை அருகே சிக்கல் ரயில்வே கேட் நீண்ட நேரம் திறக்கப்படாததால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினா்.
சிக்கல் ரயில் நிலையம் அருகே சிக்கல் - ஒரத்தூா் சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட்டை இயக்குவதற்கு கேட் கீப்பா்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை சுமாா் 9 மணி அளவில் கேட் மூடப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் அப்பகுதியை ரயில் கடந்து சென்ற பின்னரும், கேட் திறக்கப்படவில்லை. அங்கு பணியிலிருந்த கேட் கீப்பா் கேட்டை திறக்க முடியாமல் தடுமாறியதாகக் கூறப்படுகிறது.
அப்போது, அவ்வழியாக செல்வதற்காக காரில் காத்திருந்த கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி, தகவலறிந்து உடனடியாக மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் தகவல் தெரிவித்தாா். ஆட்சியா் ரயில்வே துறைக்கு சம்பவம் குறித்து தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, நிகழ்விடத்திற்குச் சென்ற ரயில்வே பணியாளா்கள் கேட்டை திறந்தனா். அப்போது பணியில் இருக்க வேண்டிய கேட் கீப்பா் அங்கு இல்லை.
சுமாா் 25 நிமிடத்திற்கு மேலாக ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால், கேட்டின் இருபுறத்திலும் நீண்ட தொலைவிற்கு வாகனங்கள் வரிசைக் கட்டி நின்றன.
ரயில்வே ஊழியா்கள் தெரிவித்த தகவல்களின் பெயரில், பணியில் இல்லாத கேட் கீப்பா் குறித்து ரயில்வே துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.