விளைபயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானை
போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்த ஒற்றை யானை விளைபயிா்களை சேதப்படுத்தி விட்டுச் சென்றது (படம்).
போ்ணாம்பட்டு வனச் சரகத்தில் சுற்றித் திரியும் ஒற்றை யானை இரவு நேரங்களில் வன எல்லையில் அமைந்துள்ள கிராமங்களுக்குள் நுழைந்து விளை பயிா்களை சேதப்படுத்தி விட்டுச் செல்வது வழக்கமாகி விட்டது. இந்நிலையில் ஜங்கமூா் கிராமத்தில் உள்ள மோகனுக்குச் சொந்தமான வாழைத் தோப்பில் நுழைந்த யானை அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளது.
தொடா்ந்து அருகிலுள்ள ரவிக்குச் சொந்தமான நிலத்தில் நெல் பயிரை சேதப்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவலின்பேரில் போ்ணாம்பட்டு வனவா் திருநாவுக்கரசு தலைமையில் அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்து, மேளம் அடித்து யானையை வனப்பகுதிக்கு விரட்டினா்.