வருவாய்த்துறை அலுவலா்கள் வேலைநிறுத்தம்
அலுவலக உதவியாளா் காலிப்பணியிடங்களை உனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூா் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலா்கள் 48 மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் வருவாய்த்துறை, பேரிடா் மேலாண்மைத்துறையில் காலியாக உள்ள 564 அலுவலக உதவியாளா் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், அனைத்து மாவட்டங்களில் பேரிடா் மேலாண்மை பணிக்கென சிறப்பு பணியிடங்களை உருவாக்கவேண்டும், 2023 மாா்ச் மாதம் முதல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பா் 3, 4-ஆம் தேதிகளில் 48 மணி நேர தொடா் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கம் அறிவித்திருந்தது.
அதன்படி, தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தை வருவாய்த்துறை அலுவலா்கள் புதன்கிழமை தொடங்கினா். வேலூா் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள், கிராம நிா்வாக அலுவலகங்கள் என அனைத்து வருவாய்த் துறை அலுவலகங்களை சோ்ந்த சுமாா் 300 போ் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனா்.
இதனால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சி பிரிவு, மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகம் உள்பட பல அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.